திருச்சி அருகிலுள்ள திருநாராயணபுரத்தில் பிரம்மாவுக்கு உபதேசம் செய்யும் பெருமாள் கோயில் உள்ளது. இவருக்கு நட்சத்திர தீபம் ஏற்றினால் திருமணத்தடை நீங்கும்.படைக்கும் தொழிலை ஏற்ற பிரம்மா, அவருக்கு உபதேசம் செய்த பெருமாள் இத்தலத்திலே பள்ளி கொண்டார். இவரை ‘வேத நாராயணர்’ என்பர். பிற்காலத்தில் சுவாமி சிலை மண்ணால் மூடப்பட்டது. இப்பகுதியை ஆண்ட மன்னர் வானவராயரின் கனவில், மண்ணில் தான் புதைந்திருப்பதைத் தெரிவித்தார். சிலையைக் கண்டெடுத்த மன்னர் பின்னர் கோயில் எழுப்பினார்.
படுத்த நிலையில் காட்சியளிக்கும் மூலவருக்கு தலையணையாக நான்கு வேதங்கள் உள்ளன. நாபியிலுள்ள பிரம்மாவிற்கு உபதேசிக்கும் கோலத்தில் சுவாமி இருக்கிறார். இரணிய வதத்தின் போது உக்கிர கோலத்தில் காட்சியளித்த நரசிம்மர், இங்கு குழந்தையாக காட்சிளிக்கிறார். அவரது காலடியில் மூன்று வயது பாலகனாக பிரகலாதன் நிற்கிறார்.ஆதிசேஷனும், அவரது மனைவியும் வேதநாராயணரை தாங்கியபடி உள்ளனர். நாக, களத்திர தோஷத்தால் திருமணத் தடை உள்ளவர்கள் இங்கு வழிபட தோஷம் தீரும்.
பிள்ளைத் திருநறையூர் அரையர் என்னும் பக்தர், குடும்பத்துடன் இங்கு வந்த போது திடீரென கோயில் கூரை மீது தீப்பற்றியது. அதிர்ந்த அரையர், தீ பரவுவதைத் தடுக்க மனைவி, குழந்தைகளை படுக்க வைத்து, அவர்கள் மீது குறுக்காக தானும் விழுந்து தடுத்தார். அவருக்கு காட்சியளித்த பெருமாள் மோட்சத்தை அளித்தார்.
ராமானுஜர் இங்கு தரிசித்த போது ‘காவிரியில் நீராடி காவி உடுத்தி வா!’ என கட்டளையிட்டார் சுவாமி. ராமானுஜரும் அவ்வாறே உடுத்தினார். இந்த நிகழ்ச்சிக்காக சித்திரை மாதம் திருவாதிரை நட்சத்திரத்தன்று ராமானுஜர் காவியுடை அணிந்து உலா வருகிறார்.பிரம்மா உபதேசம் பெற்ற தலம் என்பதால் இது கல்வித்தலமாகத் திகழ்கிறது. வேதநாரயணருக்கு திருவோணம், ஏகாதசி, அமாவாசை நாளில் சிறப்பு பூஜை நடக்கிறது. குருபலம் இல்லாவிட்டால் திருமணம் தடைபடும். இவர்கள் சுவாமிக்கு துளசி மாலை அணிவித்து
27 நெய் தீபம் ஏற்றுகின்றனர். வியாழன் அல்லது பிறந்த நட்சத்திரத்தன்று செய்வது சிறப்பு.