திருப்பரங்குன்றம், பழனி, தமிழகம் முழுவதும் முருகன் ஆலயங்களிலும் இன்று சூரசம்ஹாரம்

கந்த சஷ்டி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் இன்று தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து முருகன் கோவில்களிலும் நடைபெறுகிறது. திருப்பரங்குன்றம், பழனி உள்ளிட்ட முருகப்பெருமானின் அறுபடை வீடுகளிலும் சூரசம்ஹாரம் நடைபெறுவதை முன்னிட்டு பக்தர்கள் குவிந்துள்ளனர்.

முருகனின் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கடந்த 28ம் தேதி காலை காப்பு கட்டுதலுடன் கந்தசஷ்டி விழா துவங்கியது. இன்று மாலை சூரசம்ஹாரம் நடைபெறுகிறது. சஷ்டி விரதம் இருக்கும் பக்தர்கள் இன்று மாலை சூரசம்ஹாரம் முடிந்து விரதத்தை முடிக்கின்றனர்.பழநி தண்டாயுதபாணி சுவாமி மலைக்கோயிலில் கடந்த 28ஆம் தேதி உச்சிகாலத்தில் காப்புக்கட்டுதலுடன் கந்த சஷ்டி விழா துவங்கியது. முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் இன்று நடைபெறுகிறது. இன்று பிற்பகல் 2.45 மணிக்கு மலைக்கோயிலில் சின்னக்குமாரசுவாமி அசுரர்களை வதம்புரிவதற்காக மலைக்கொழுந்து அம்மனிடம் வேல் வாங்கும் நிகழ்ச்சி நடைபெறும்.

மாலை 6 மணிக்கு வடக்கு கிரிவீதியில் தாரகாசூரன் வதமும், கிழக்கு கிரிவீதியில் பானுகோபசூரன் வதமும், தெற்கு கிரிவீதியில் சிங்கமுகாசூரன் வதமும், மேற்கு கிரிவீதியில் சூரபத்மன் வதமும் நடைபெறும். தொடர்ந்து இரவு 9 மணிக்கு ஆரியர் மண்டபத்தில் வெற்றிவிழா நடைபெறும்.வயலூர் முருகன்
திருச்சி மாநகருக்கு அருகில் வயலூரில் புகழ்பெற்ற சுப்பிரமணியசாமி கோவில் உள்ளது. இங்கு தான் அருணகிரி நாதருக்கு முருகப்பெருமான் காட்சி கொடுத்ததாக தலவரலாறு கூறுகிறது. இங்கு கந்த சஷ்டி பெருவிழாவின் 6ஆம் நாளான இன்று, சூரசம்ஹாரம் நடக்கிறது.

இதனையொட்டி காலை 9 மணிக்கு சண்முகருக்கு அர்சசனையும், அதனைத் தொடர்ந்து காலை 10.40 மணியளவில் சூரபத்மனை வதம் செய்வதற்காக சக்திவேல் வாங்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. இன்று இரவு 7.30 மணியளவில் சிங்காரவேலர் ஆட்டுக்கிடா வாகனத்தில் எழுந்தருளி சூரபத்மனை ஆட்கொள்ளும் சூரசம்ஹாரம் நடைபெறும். அதைத் தொடர்ந்துஇ வெள்ளிக் கேடயத்தில் சிங்காரவேலர் எழுந்தருளி காட்சியளிக்கும் முக்கிய நிகழ்ச்சி நடைபெறவிருக்கிறது.

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள புகழ்பெற்ற குடவரைக் கோவிலான கழுகுமலை கழுகாலமூர்த்தி கோவிலில் கந்த சஷ்டி பெருவிழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் இன்று மாலையில் நடக்கிறது. இன்று காலையில் கழுகாசலமூர்த்தி பல்லக்கிலும் வள்ளி-தெய்வானை அம்பாள்கள் பூஞ்சப்பரத்திலும் எழுந்தருளி வீதியுலாவும்இமதியம் சண்முகருக்கு அர்ச்சனை வழிபாடும் நடைபெற்றது.

மதியம் 3 மணியளவில் கழுகாசலமூர்த்தி கையில் வீரவேல் ஏந்தி, வெள்ளி மயில் வாகனத்தில் போர்க்கோளம் பூண்டு சூரனை சம்ஹாரம் செய்ய புறப்படும் நிகழ்ச்சி நடைபெறும். மாலை 4.30 மணியளவில் சுவாமி வேல் கொண்டு சூரனை சம்ஹாரம் செய்யும் நிகழ்ச்சி நடைபெறும். இரவில் சுவாமிக்கு அபிஷேகம் தீபாராதனை நடைபெறுகிறது.

வடபழனி முருகன் கோவில்

சென்னை வடபழனியில் உள்ள வடபழனி சுப்ரமணியசுவாமி திருக்கோவிலில், கந்த சஷ்டி பெருவிழாவின் முக்கிய நிகழ்வான சூரனை சம்ஹாரம் செய்து ஆட்கொள்ளும் வைபவம் இன்று மாலையில் நடைபெறவிருக்கிறது. முருகப்பெருமான் சூரனை சம்ஹாரம் செய்யும் நிகழ்வையொட்டி வடபழனி கோவிலில், சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இன்று இரவு 7 மணியளவில், சூரபத்மனை முருகப்பெருமான் சம்ஹாரம் செய்யும் நிகழ்வு தொடங்குகிறது. கோவிலின் வெளிப்புறத்தில் சூரசம்ஹார நிகழ்ச்சி நடைபெற உள்ளது. அதனைத் தொடர்ந்து முருகப்பெருமான் தெய்வானையுடன் தம்பதி சமேதராக மயில்வாகனத்தில் புறப்பட்டு உலா வருகிறார்.

பாண்டிச்சேரி

பாண்டிச்சேரியில், மிகவும் பிரசித்தி பெற்ற கவுசிக பாலசுப்ரமணிய சாமி கோவிலில் நேற்று இரவு வேல் வாங்கும் நிகழ்வு நடைபெற்றது. அப்போது, உற்சவ மூர்த்தியான முருகப் பெருமானின் சிலையின் முகத்தில், முத்து முத்தாக வியர்வைத் துளிகள் பூத்து நின்றது. இதைப் பார்த்த கோவில் பூசாரி உடனடியாக பக்தர்களிடம் தெரிவித்துள்ளார். இதனைக் கண்டு பரவசமடைந்த முருகு பக்தர்கள் அனைவரும் பக்தி பரவசத்தில் முருகனுக்கு அரோகரா என்று முழக்கமிட்டனர். கந்த சஷ்டி பெருவிழாவில் வேல் வாங்கும் நிகழ்வின் போது, கடந்த 2 ஆண்டுகளாக கவுசிக பாலசுப்ரமணியசாமி கோவிலில் உற்சவ மூர்த்தியான முருகக்கடவுளின் சிலையின் முகத்தில் வியர்வை போன்று நீர்த்துளிகள் வருவது குறிப்பிடத்தக்கது.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *