சாயிநாதனைச் சரணடைந்தால் அவர் நம் வீட்டின் காவலனாக இருப்பார்..!

பாபா, தம் பக்தர்களிடம் எளிமையான, பகட்டில்லாத, ஆழ்ந்த நம்பிக்கையுடன்கூடிய பக்தியை மட்டுமே விரும்புகிறவர். ‘ஏக வில்வம் சிவார்ப்பணம்’ என்று சொல்வதுண்டு. ‘ஒரு வில்வ இலையைப் பக்தியோடு சமர்ப்பித்தாலே, சிவன் மனம்மகிழ்ந்து நமக்கு அருள்வான்’ என்று வில்வ அஷ்டோத்திரம் சொல்கிறது.

பாபாவும் அப்படித்தான். பொன்கொண்டு அர்ச்சிக்கிறவர்களைவிட, ஒரு மலர் கொண்டு துதிக்கிறவர்களை நேசிக்கிறவர். நாம் யாரையெல்லாம் கண்டு வெறுக்கிறோமோ, அவர்களையெல்லாம் பாபா நேசிப்பார். புறவயமான தோற்றம் அவரைக் கவர்வதே இல்லை. காரணம், பாபா நம் உள்ளங்களை அறிந்தவர். அழகான தோற்றமும் அழுக்கான மனமுமாக அவரை நெருங்கவே முடியாது. அதேவேளையில், அழுக்கான தோற்றமும் அழகான மனமும் கொண்ட மனிதர்களை சாயி தானே நாடி வருகிறார்.

பாபா குடியிருந்த துவாரகாமாயியில் ரோஹிலா என்கிற இளைஞனும் வந்து சேர்ந்துகொண்டான். ரோஹிலா, பார்க்க முரட்டுத்தனமான ஆளாக இருப்பான். அவனுடைய செய்கைகளும் அதை உறுதிசெய்வதைப் போலவே இருக்கும். சாந்த சொரூபியான சாயி, அவனோடு துவாரகாமாயியைப் பகிர்ந்துகொள்ளவேண்டிய சூழல். ரோஹிலாவுக்கு ஒரு விநோத வழக்கம். எப்போதும் சத்தமாக குரான் வாசிப்பான்.

அவன் குரலோ, கர்ண கொடூரமாக இருக்கும். ‘அல்லாஹ் அக்பர்’ என்று சத்தமாகக் கத்துவான். எப்போது கத்துவான் என்று சொல்ல முடியாது.அவனின் இந்த விநோதம் எல்லாம் பெரும்பாலும் இரவில்தான் அரங்கேறும். ஷீரடி கிராம மக்கள், பகலெல்லாம் வயல்வெளிகளில் உழைத்துவிட்டு வந்து படுத்து கண் அயரத் தொடங்கும் நேரம் ரோஹிலா, தன் தொழுகையைத் தொடங்கிவிடுவான். அவன், குரானில் இருக்கும் கலீமாக்களை சத்தமாக ஓதுவான். ஒருநாள், இரண்டு நாளென்றால் பரவாயில்லை. தொடர்ந்து இதே வாடிக்கை என்றால் மக்கள் என்னதான் செய்வார்கள்.

இதில் ஆச்சர்யம் என்னவென்றால், துவாரகாமாயிக்கு வெளியே இருக்கும் மக்களுக்கே இவ்வளவு தொந்தரவு என்றால், அவனோடு ஒரே இடத்தில் இருக்கும் சாயியின் நிலைமை என்னவாக இருக்கும்? எப்படி சாயி அவனை சகித்துக்கொள்கிறார் என்பதுதான் எல்லோருக்கும் வியப்பாக இருந்தது.இன்று, எல்லோரும் பக்திப் பாடல்கள் பாடுவதென்பதைப் பெரும்பாலும் நிறுத்திவிட்டோம். ஆடியோவிலும் வீடியோவிலும் ஒலிக்கவிட்டுக் கேட்கிறோம். கூடப் பாடும் பழக்கம்கூட பெரும்பாலானவர்களுக்கு இல்லை. யாரையாவது “பாடு” என்றால், பதிலுக்கு அவர்கள், “நான் பாடினா சாமி எழுந்து ஓடிடுவார், பரவாயில்லையா?” என்று கேட்பார்கள். ரோஹிலாவின் கதையில் நமக்கு இருக்கும் செய்தி அதுதான்.

ஒரு குழந்தை, அது எந்தக் குரலில் பாடினாலும், எந்த முறையில் பாடினாலும் அதன் தாய் அதை ஆசையோடு கேட்டு ரசிப்பார் இல்லையா… சுற்றியிருப்பவர்களுக்கு கர்ண கொடூரமாக இருக்கும் குரல், தாய்க்கு இனிமையானதாகத்தானே இருக்கும். ரோஹிலா விஷயத்தில் சாயி ஒரு தாயன்போடல்லவா நடந்துகொள்கிறார். திறமையோடு பாடத்தெரிந்தவர்களின் ஆராதனையை மட்டும் சாயி ஏற்பதில்லை. பாடும் திறமையற்ற, அதேநேரம் பகவத் ப்ரேமையுடன் பாடப்படும் பாமரனின் பாடலையும் சாயி விரும்பிக் கேட்கிறார்.ரோஹிலாவின் தொல்லையைத் தாங்காத மக்கள் பாபாவிடம் வந்து, அவனால் தங்களுக்கு ஏற்படும் தொல்லையைக் குறைக்கச் சொன்னார்கள். அதற்கு பாபா புன்னகையோடு,“அவனை அவன் போக்கிலேயே விட்டுவிடுங்கள் ” என்றார். ஆனால், இந்த வெற்று சமாதானத்தில் மக்கள் திருப்தி ஆகிவிட மாட்டார்கள் என்பதைப் பாபா அறிவார்.

அதனால்,ரோஹிலாவுக்கு ஒரு மனைவி இருக்கிறாள். அவள் மிகவும் மோசமானவள். ரோஹிலா இப்படி நடந்துகொள்வதால், அவள் அவனை நெருங்க அஞ்சி விலகி இருக்கிறாள்” என்றார். இதை மக்கள் ஏற்றார்கள். யார்தான் இப்படி முரட்டுத்தனமான மனிதனை நெருங்கி வருவார்கள் என்று நினைத்துக்கொண்டு சமாதானமாகிப்போனார்கள். ஆனால், ரோஹிலாவுக்கு அப்படி எந்த மனைவியும் இல்லை.ரோஹிலா ஓதும் கலீமாக்களை சாயி விரும்பிக் கேட்பார். சில நேரம் அவனோடு விவாதிப்பார்.

அவனுக்கு விளங்காத பகுதிகளை அவனுக்கு உபதேசிப்பார்.நீண்ட காலம் சாயி உடனே வாழ்ந்தார் ரோஹிலா. சாயி ஒருபோதும் ரோஹிலாவை வெறுத்ததே இல்லை.பாபாவின் பக்தரான ஜோஷி தேவ்காங்கர் என்பவரது மகள் மலன்பாய் நோயுற்றார். வைத்தியம் பலன் அளிக்கவில்லை. நம்பியவர்களுக்குக் கண்கண்ட வைத்தியர், சாய்நாதன் தானே. எந்த வீட்டில் சாயியை நம்புகிறார்களோ, அந்த வீட்டில் அவர் காவலனாகவே இருக்கிறார். இதை, அவர் பல சந்தர்ப்பங்களில் கூறியிருக்கிறார். நாம் ஷீரடியில் இருந்து எத்தனை தொலைவில் இருந்தாலும் கவலையில்லை.

ஒரு நொடியில் அவர் நாம் இருக்கும் இடத்தில் அருள் செய்ய வல்லவர். அந்த நம்பிக்கை மலன்பாய்க்கும் ஜோஷிக்கும் இருந்தது.அவர், தன் மகளைச் சாயி நாதனிடம் அழைத்துச் சென்றார். அவர், அவளை கம்பளியில் படுக்கவைக்குமாறு கூறிவிட்டு, நீர் தவிர வேறு எதுவும் தரவேண்டாம் என்று சொல்லிவிட்டார். நாளுக்கு நாள் உடல் நலம் குன்றி, அந்தப் பெண் மரணமடைந்தாள்.அவளுக்கான ஈமக்கிரியைகளைச் செய்ய அவள் வீட்டார் தயாராகிக்கொண்டிருந்தனர். அப்போது அந்தப் பெண் மூச்சுவிடுவதைப் போல தோன்றியது. எல்லோரும் அவளை எழுப்பிப் பார்த்தனர். என்ன அதிசயம்! அவள் பிழைத்துக்கொண்டாள். அவளிடம் என்ன நடந்தது என்று கேட்டார்கள். அதற்கு அவள், ” கரிய உருவம் ஒன்று என்னைத் தூக்கிக்கொண்டு சென்றது. நான் பயத்தில் சாயிநாதனைச் சரணடைந்து, ‘என்னைக் காப்பாற்றுங்கள்’ என்று கத்தினேன். அப்போது, சாயி அங்கு தன் தடியோடு வந்து என்னை மீட்டு, இங்கு கொண்டு வந்து விட்டுவிட்டார்” என்று சொன்னாள்.

கேட்டுக்கொண்டிருந்தவர்கள் அனைவரும் ஆச்சர்யத்தில் ஆழ்ந்தனர். ஆனால், அதுவரை அங்கு அமர்ந்திருந்த பாபா, அங்கிருந்து கிளம்பி வெளியே போனார்.காலனிடமிருந்து மார்க்கண்டேயனைக் காத்ததுபோல, மலன்பாயைக் காப்பாற்றிவிட்டு ஏதும் அறியாதவராகச் சத்தமிட்டு யாரையோ திட்டுவதுபோலத் திட்டிக்கொண்டு செல்லும் பாபாவின் திசையை நோக்கி எல்லோரும் வணங்கினர்.நாம் பாபாவை முழுமையாக நம்பிச் சரணடைகிறபோது, அவர் உண்மையாகவே எப்போதும் நம் வீட்டின் காவலனாகவே இருப்பார்.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *