கவலை வேண்டாம் விஞ்ஞானிகளே..ஒட்டு மொத்த இந்தியாவும் உங்களோடுதான் இருக்கிறது..!! இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு உத்வேகமளித்த பிரதமர் மோடி…!!

மொத்த இந்தியாவும் உங்களுடன் இருக்கிறது என்று இஸ்ரோவில் விஞ்ஞானிகள் மத்தியில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.சந்திரயான்-2 விண்கலத்தில் இருந்து பிரிந்த விக்ரம் என்ற லேண்டர், சனிக்கிழமை அதிகாலை 1.30 மணி அளவில் நிலவின் தரைப்பகுதியில் தரை இறங்குவதாக இருந்தது.நிலவின் அருகே 2.1 கிலோமீட்டர் தொலைவுக்கு அது அருகே சென்றபோது திடீரென விஞ்ஞானிகளுடன் தொடர்பு துண்டிக்கப்பட்டது.இஸ்ரோவின் வெற்றிக் கொண்டாட்டத்தில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி நேற்று பெங்களூரில் உள்ள அதன் தலைமையகம் சென்று, விஞ்ஞானிகளுடன் அமர்ந்து சந்திரயான் லேண்டர், நிலவில் தரையிறங்கும் நிகழ்வை நேரடியாக பார்த்துக்கொண்டிருந்தார்.ஆனால், விஞ்ஞானிகள் உடனான கட்டுப்பாட்டை லேண்டர் இழந்ததும், கவலைப்பட வேண்டாம் என்ற பிரதமர் ஆறுதல் கூறினார். முன்னதாக நேற்று காலை பிரதமர் வெளியிட்ட ருவீட்டில் 130 கோடி இந்தியர்களும் சந்திரயான் வெற்றியை ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள் என்று பிரதமர் தெரிவித்திருந்தார்.இந்த நிலையில், இன்று காலை 8 மணிக்கு நாட்டு மக்களிடம் இதுதொடர்பாக அவர் உரையாற்றினார். காலை 7.59 மணிக்கு இஸ்ரோ வருகை தந்த பிரதமரை, இஸ்ரோ தலைவர் சிவன், வரவேற்றார். இதன்பிறகு விஞ்ஞானிகள் மத்தியில் நின்றபடி, நாட்டு மக்களுக்கு மோடி உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது: இன்று சில தடைகள் ஏற்பட்டுள்ளன. ஆனால், அது நமது உறுதியை பலவீனப்படுத்தாது. அதற்கு பதிலாக, அது நம்மை பலப்படுத்துகிறது. நான் உங்களுடன் ஒவ்வொரு கணமும் இருக்கிறேன். இன்று நீங்கள் தடைகளை எதிர்கொண்டிருந்தாலும், நம்பிக்கையை இழக்கவில்லை. உண்மையில், இது பன்மடங்கு பலப்படுத்தியுள்ளது.இந்தியாவில் அனைவரும் நமது விஞ்ஞானிகளுடன் ஒற்றுமையுடன் நிற்கிறார்கள். நமது விண்வெளித் திட்டத்தால் நாங்கள் பெருமைப்படுகிறோம். இன்று நிலவை தொடுவதற்கான நம் தீர்மானம் இன்னும் வலுவடைந்துள்ளது. நாம் மீண்டும் எழுந்து வருவோம்.சிறந்தது இன்னும் வரவில்லை, என்று நினைத்துக்கொள்வோம். புதிய எல்லைகள் இன்னும் எட்டப்பட வேண்டும். வெறும் 2 கிலோ மீட்டர் தொலைவில்தான் நாம் லேண்டருடன் தொடர்பை இழந்துள்ளோம். அதுவரை நாம் சென்றதே பெரிய சாதனைதான். நிலவின் தென் துருவத்திற்கு இதுவரை எந்த நாடும் சென்றதில்லை என்று நினைக்கும்போது, நமது விஞ்ஞானிகளை நினைத்து பெருமையாக உள்ளது.நீங்கள் உங்கள் வாழ்நாள் முழுமையையும், இந்திய தாயை பெருமைப்படுத்த செலவிட்டு வருகிறீர்கள். இரவு முழுக்க நான் உங்களோடு இருந்தேன். உங்களது வருத்தம் எனக்கு புரிகிறது. ஆனால், கவலை வேண்டாம். மொத்த இந்தியாவும், உங்களோடு நிற்கிறது. இன்று நான் பெருமையுடன் சொல்ல முடியும். உங்கள் முயற்சி மதிப்புக்குரியது. நமது விஞ்ஞானிகள் குழு கடினமாக உழைத்தது, வெகுதூரம் பயணித்தது. இந்த தற்காலிக பின்னடைவால் கிடைத்த பாடம், நமக்கு வழிகாட்டும். இன்றிலிருந்து நம்மை மேலும் வலுவாகவும் சிறப்பாகவும் மாற்றும். இவ்வாறு மோடி உரையாற்றினார்.

மிக விரைவில் ஒரு புதிய விடியலும் பிரகாசமும் இருக்கும். அறிவியலில் தோல்வி என்பதே இல்லை, அறிவியல் என்பது ஆய்வு மற்றும் முயற்சிகள் மட்டுமே. நமது நாட்டின் புகழ்பெற்ற வரலாற்றில், நமது வேகத்தை குறைத்த தருணங்களை நாம் சந்தித்திருக்கிறோம். ஆனால், அவை ஒருபோதும் நம் உத்வேகத்தை நசுக்கிவிடமுடியவில்லை. நாம் மீண்டும் பல மடங்கு பலத்தோடு திரும்பி வந்து, வியத்தகு செயல்களைச் செய்துள்ளோம். இதுதான் நமது நாகரிகம் உயரமாக நிற்க காரணம்.நாம் மீண்டும் உயர்ந்து வெற்றியின் புதிய உயரங்களை எட்டுவோம். நமது விஞ்ஞானிகளுக்கு நான் மீண்டும் சொல்ல விரும்புகிறேன்- இந்தியா உங்களுடன் உள்ளது. நீங்கள் தேசிய முன்னேற்றத்திற்கு நம்பமுடியாத பங்களிப்பை வழங்கிய தொழில் வல்லுநர்கள். இவ்வாறு மோடி உரையாற்றினார்.மோடி உரை சுமார், 25 நிமிடங்கள் நீடித்தது. மோடி தனது உரையின் துவக்கத்திலும், நிறைவின்போதும், 3 முறை, பாரத் மாதா கீ ஜெய்.. என்ற கோஷத்தை முழங்கினார். இதைப் பின்பற்றி, விஞ்ஞானிகளும் இதே கோஷத்தை எழுப்பினர். இதனால் இஸ்ரோ வளாகத்தில் மீண்டும் உற்சாகம் தொற்றிக்கொண்டது.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *