வெறும் 02 கிலோமீற்றர் தான்… நொருங்கிப் போன இதயங்கள்…!! மனதை கொள்ளை கொண்ட விக்ரம்..!!

கோடிக்கணக்கான இதயங்கள் நேற்று அப்படியே நின்று போயின. ஒவ்வொரு விழியிலும் கண்ணீர்.. ஏக்கம், பெருமூச்சு, ஆதங்கம், ஏமாற்றம் என கலவையான உணர்வுகளுடன் தூங்கப் போயினர் இந்தியர்கள். ஆனால், தூக்கம்தான் வரவில்லை.. காரணம் விக்ரமுக்கு என்னாச்சு என்ற மன உளைச்சல்.இந்தியாவின் விண்வெளி அறிவியல் வரலாற்றில் நேற்றைய தினம் மறக்க முடியாத நாள். புதிய வரலாறு படைக்கப் போகும் பெருமிதம், கர்வத்துடன் 125 கோடி இந்தியர்களும், வெளிநாடுகளில் வாழும் இந்தியர்களும் தூக்கம், சாப்பாடு மறந்து காத்துக் கிடந்தனர். அத்தனை பேரையும் விக்ரம் ஏமாற்றி விட்டான்.

ஆனால், விக்ரம் மீது யாருக்குமே கோபம் இல்லை. காரணம், இந்தியர்களை நோக்கி உலகத்தின் வியப்புப் பார்வையை ஒட்டுமொத்தமாக திருப்பி விட்டுவிட்டான் விக்ரம். இந்தியர்களின் பெருமை உலக அரங்கில் நேற்று ஒரே நாளில் உயரப் போய் விட்டது. காரணம், நிலவின் இதயத்தை வெகு நெருக்கமாக போய் இந்தியா தொட்டு விட்டதுதான்.மிக மிக அருமையான ஒரு பயணம் சந்திரயான் 2ன் பயணம். ஜிஎஸ்எல்வி ராக்கெட் மூலம் விண்வெளியில் ஏவப்பட்டது.முதல் நேற்றைய அந்த கடைசி நேர 2 நிமிடம் வரை எல்லாமே பக்காவாக போய்க் கொண்டிருந்தது. எந்த ஒரு இடத்திலும் எந்தச் சிக்கலும் வரவில்லை. எல்லாமே திட்டமிடப்பட்டது போலவே நடந்தது. அது முதல் சாதனை.பூமியின் சுற்றுப் பாதையிலிருந்து பிரிந்தது, நிலவின் சுற்றுப் பாதைக்குள் நுழைந்தது. படிப்படியாக தூரம் குறைந்தது, ஆர்பிட்டரிலிருந்து லேன்டர் வெற்றிகரமாக பிரிந்தது என எல்லாமே வெற்றிதான்.இது இந்தியாவின் விண்வெளி விஞ்ஞானிகளின் கடின உழைப்புக்கும், அறிவியல் திறமைக்கும் மிக முக்கிய தருணமாகும்.கிட்டத்தட்ட 3.44 லட்சம் கிலோமீட்டரை கடந்துள்ளது சந்திரயான் 2 விண்கலம். இது மிகப் பெரிய சாதனை. இந்த சாதனை தூரத்தை அது எந்த பிசிறும் இல்லாமல் கடந்துள்ளது.ஆனால், கடைசி 2.1 கிலோமீட்டர் தூரத்தில்தான் அது தோல்வியில் முடிந்துள்ளது. பழம் நழுவி பாலில் விழுவது போல வந்து, கடைசியில் மாயமாகிப் போனதுதான் அத்தனை இதயங்களையும் நொறுக்கி விட்டது.விக்ரமும் சாதனை படைத்து விட்டான், நாம் சாதித்து விட்டோம் என்ற மகிழ்ச்சிக் கூக்குரலுக்காக இந்தியர்கள் காத்திருந்த நேரத்தில் அவன் மாயமாகிப் போனது அத்தனை பேரையும் துடி துடிக்க வைத்து விட்டது.இத்தனை தூரத்தை எளிதாக கடந்தாயே விக்ரம்.. இந்த சின்ன தூரத்தில் சறுக்கி விட்டாயே என்ற ஆதங்கமும், பரிதவிப்பும்தான் இந்தியர்களிடம் நிலவியது.ஆனாலும் சர்வதேச அறிவியல் அரங்கில் ஒட்டுமொத்த இந்தியர்களையும் தலை நிமிர வைத்து விட்டான் விக்ரம் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.. இன்னும் நிறைய நிறைய நாம் சாதிக்கப் போகிறோம். அதற்கான முதல் விதைதான் விக்ரம் என்ற அளவில் நாம் முன்னேறிச் செல்ல வேண்டும் ஆய்வுகளில்.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *