சந்தோஷம் நிறைந்திருக்கும் வீட்டில் லட்சுமி சங்கடமின்றி குடியேறுவாள்

ஸ்ரீ எனப்படும் லட்சுமி வாசம் செய்யும் இடங்களில் செல்வம் பெருகும். மகாலட்சுமி செல்வத்திற்கு அதிபதி. எங்கெல்லாம் சந்தோஷமும் சிரிப்பொலியும் கேட்கிறதோ அங்கே அன்னை சந்தோஷமாக குடியேறுவாள். கண்ணீர் விடாத பெண்கள், சர்ச்சையும் சண்டையும் போடாத பெண்கள் லட்சுமியின் அம்சம்.

பெண்கள் எங்கெல்லாம் கவுரவமாக மதிக்கப்படுகிறார்களோ அங்கே மகாலட்சுமி சந்தோசமாக குடியேறுவாள். பாற்கடலில் இருந்து அவதரித்த அன்னை மகாலட்சுமி இறைவன் மகாவிஷ்ணுவின் மார்பில் குடியேறினார். லட்சுமி இருக்கும் இடம் செல்வம் பெருகும். நம் வீட்டிலும் செல்வம் பெருக அன்னை லட்சுமியை நிரந்தரமாக தங்க வைக்க என்ன செய்யலாம் என்ன செய்யக்கூடாது என்று பார்க்கலாம்.

காமதேனு
பசுவின் உடலில் ஒவ்வொரு பாகத்திலும் ஒரு தெய்வம் குடியிருக்கின்றனர். பசுவின் பின்புறத்தில் மகாலட்சுமி வாசம் செய்கிறாள். காலையில் எழுந்ததும் காணத் தக்கவற்றுள் பசுவின் பின் பக்கமும் ஒன்று. ஒருமுறை விஷ்ணு காமதேனுவை படைக்க எண்ணினார். ஒரு பசுவை வரவழைத்து அதை காமதேனுவாக மாற்ற எண்ணி அனைத்து தேவர்களையும் அழைத்து அதன் உடலில் சென்று அமருமாறு கூறினார். அவர் கேட்டுக் கொண்டதற்கு இணங்கி அனைத்து தேவர்களும் ஒரு பசுவின் உடலில் சென்று தங்கினர்.

லட்சுமிதேவி
தாமதமாக வந்த லஷ்மிதேவிக்கு பசுவின் எந்த இடத்திலும் இடம் கிடைக்கவில்லை. ஆனாலும் பசுவின் உடலில் தான் அமர வேண்டும் என தீர்மானித்து விட்டதினால் காலியாக இருந்த அதன் ஆசன வாயில் சென்று அமர்ந்து கொண்டாள். அந்தப் பசு காமதேனுவாக மாறியது. அந்த பசு மூத்திரம் பெய்ய அது லஷ்மி தேவியின் உடலை தழுவிக் கொண்டு வந்தது. ஆகவேதான் பசுவின் பின் புரத்தை தொட்டு வணங்கினால் லஷ்மி கடாஷம் கிடைக்கும் என்கின்றனர்.

திருமாள் மார்பில் உறைபவள்
திருமகளின் அருளைப் பெறத் திருமாலையும் வழிபட வேண்டும். திருமாலை விடுத்துத் திருமகளை மட்டும் வணங்கக் கூடாது. லட்சுமி இருக்கும் இடம் செல்வம் பெருகும். நம் வீட்டிலும் செல்வம் பெருக அன்னை லட்சுமியை நிரந்தரமாக தங்க வைக்க பெண்களை சந்தோஷமாக சிரித்து பேசிக்கொண்டு மகிழ்ச்சியாக இருக்க வேண்டும்.

லட்சுமி தேவி அம்சம்
வீட்டில் கோமியம் தெளிப்பதால் செல்வ வளம் பெருகும் என்று கூறுவதும் இதனால்தான். லட்சுமியின் அம்சம் நிறைந்த பசுக்களுக்கு ஒரு பழம் வாங்கிக் கொடுத்தாலே கோடி புண்ணியம் தேடி வரும் தினசரி தீவனம் அளித்தால் செல்வம் பெருகும். பசுக்களிடம் குபேரன் குடிகொண்டிருக்கிறான். கோமாதா பூஜை குபேர பூஜைக்கு சமம். புனிதமான பசுவின் பாதம் பட்ட இடத்தில் பாவம் வராது, அதன் கால் தூசு பட்ட இடத்தில் செல்வம் சேரும்.

நெல்லி மரம்
வீட்டில் நெல்லி மரம் இருந்தால் லக்ஷ்மி கடாக்ஷம் பெருகும். விஷ்ணுவின் அம்சமாக நெல்லிமரம் திகழ்வதால் நெல்லி மரத்தில் மகாலக்ஷ்மி வாசம் செய்கிறாள். நெல்லிக்கனிக்கு ஹரிபலம் என்ற பெயரும் உண்டு. லட்சுமி குபேரருக்கு உரிய மரமாகவும் திகழ்கிறது நெல்லி. நெல்லிமரம் இருக்கும் வீட்டில் தெய்வீக அருள் நிறைந்திருக்கும். எவ்வித தீய சக்திகளும் அணுகமுடியாது. நெல்லிமரத்தடியில் கிடைக்கும் தண்ணீர் சுவையாக இருக்கும்.

வில்வ மரம்
வில்வ மரத்தடியில் அன்னை மகாலட்சுமி தோன்றினாள். வைணவத்தலமான ஸ்ரீரங்கத்தில் தல விருட்சம் வில்வம், திருநகரிக்கு வில்வாரண்யம் என்று பெயர். திருவஹிந்திரபுரத்தில் மகாலட்சுமிக்கு வில்வத்தால்தான் அர்ச்சனை செய்வது நல்லது. அதேபோல மயிலாப்பூரில் கேசவ பெருமாள் கோவிலில் மயூர வல்லி தாயாருக்கு வில்வத்தால் அர்ச்சனை செய்த நினைத்தது நிறைவேறும்.

செந்தாமரை மலர்
செந்தாமரையில் அமர்ந்துள்ள தெய்வங்களை வழிபட பணம் பெருகும். செவ்வாய் கிழமையில் செவ்வரளி மலரைக் கொண்டு முருகனை வழிபட்டால் காரியத்தடை நீங்கி வளம் பெருகும். குபேரனுக்கு தாமரை திரி போட்டு விளக்கேற்றி வழிபட்டால் பணம் வரும். கற்பக விநாயகரை 1008 அருகம்புல் கொண்டு மகாசங்கடஹர சதுர்த்தியில் வழிபட்டு வணங்கத் தொழிலில் தடைகள் நீங்கி லாபம் கிட்டும். ஐஸ்வர்ய தூப பொடியுடன், துளசி பொடியுடன் சேர்த்து அவரவர் தன ஓரையில் தூபம் போட செல்வம் குவியும்.

பணத்தடை நீங்கும்
பசுவுடன் கூடிய கன்றுக்கு உணவளித்தால் சகல செல்வங்களும் வந்தடையும். கோவிலில் லட்சுமி மீது வைத்த தாமரை மலரைக் கொண்டு வந்து பச்சை பட்டில் வைத்து மடித்து பணப்பெட்டியில் வைக்க பணம் சேரும். முழு பாசி பருப்பை வெல்லம் கலந்த நிரில் ஊற வைத்துபின் மறுநாள் பறவைக்கு, பசுவிற்குஅளித்திடவும். இதனை தொடர்ந்து செய்து வர பணத்தடை நீங்கும்.

பன்னீர் அபிஷேகம்
சொர்ணாகர்ஷன பைரவருக்கு தூய பன்னீரில் அவரவர் பிறந்த தினத்தில் அபிஷேகம் செய்திட பணம் சேரும். சுத்தமான நீரில் வாசனை திரவியம் கலந்து இருவேளையிலும் லட்சுமி மந்திரம் கூறியபடி தெளிக்க செல்வம் சேரும்.

பணம் குவியும் வழி
வீட்டில் சுமங்கலியாக இறந்த பெண்களை நினைத்து மஞ்சளாக பிடித்து அவர்களை நினைத்து வழிபட, சகலதோஷங்கள் விலகி குடும்பத்தில் முன்னேற்றம் ஏற்படும். தனாகர்ஷண மூலிகை சட்டை பாக்கெட்டில் இருக்க பணம் குறையாது. வீட்டின் தென்கிழக்கு மூலையில் ஒரு கண்ணாடி பாத்திரத்தில் அல்லது மண்பாண்டத்தில் நீர் விட்டு அதில் சில கொத்தமல்லி இலைகளை போட்டு வைக்கவும். தினசரி புதிதாக செய்யவும். பணம் குவியும்.

பணம் கொடுக்கும் முறை
ஒருவருக்குப் பணம் கொடுக்க வேண்டும் என்றால் வாசல் படியில் நின்று கொடுக்கக் கூடாது. கொடுப்பவரும், வாங்குபவரும் வாசல்படிக்கு உள்ளே இருந்து வாங்க வேண்டும் அல்லது கீழே இறங்கி வாங்க வேண்டும். காலையில் எழுந்தவுடன் யார் முகத்தையும் பார்க்காமல் தண்ணீர் இரண்டு மடக்கு குடிக்க, லக்ஷ்மி கடாக்ஷம் கிடைக்கும், கோபம் வராது.

கல் உப்பு
வெள்ளிக்கிழமை உப்பு வாங்கினால் நன்மை உண்டாகும். சுத்தமான வீட்டில் லட்சுமி வாசம் செய்வாள். இரவில் வீட்டைப் பெருக்கினால் குப்பையை வெளியே கொட்டக் கூடாது. பகலில் குப்பையை வீட்டினுள் எந்த மூலையிலும் குவித்து வைக்கக் கூடாது. வீடுகளில் நறுமணம் மட்டுமே வீசவேண்டும்.

தினசரி குளிக்கும் முன் பசுந்தயிரை உடல் முழுவதும் தடவி சிறிது நேரம் சென்று குளிக்க பிரச்சினை விலகும். குளித்தவுடன் முதுகை முதலில் துடைக்கவும் தரித்திரம் விலகும்.

சங்கு, தயிர்
சங்கு, நெல்லிக்காய், தாமரைப்பூக்கள், சுத்தமான ஆடைகள் பசு சாணம், கோமியம் வீட்டில் இருக்க வேண்டும். காலை எழுந்தவுடன் தனது உள்ளங்கைகள், பசு, கோவில் கோபுரம், இறைவனின் படங்களைப் பார்க்கவேண்டும். இருட்டிய பின்னர்,தயிர் சேர்த்த உணவுகளை சாப்பிடக்கூடாது. அப்படி சாப்பிட்டால், எவ்வளவு பெரிய கோடீஸ்வரனாக இருந்தாலும், அவன் வறுமைக்குள் விழுந்துவிடுவான். ஒவ்வொரு பௌர்ணமி அன்று மாலை குளித்து சத்ய நாராயணரை துளசி, செண்பக மலர் இவைகளால் அர்ச்சனை செய்து, பால், பாயசம், கல்கண்டு, வைத்து வணங்கிய பின்னரே இரவு சாப்பிடவேண்டும்.

தானம் செய்யுங்கள்
சம்பாதிப்பதில் ஒரு தொகையை சேர்த்து அதனை அன்னதானத்திற்கு செலவிட அதனை போல் ஐந்து மடங்கு நம்மிடம் வந்து சேரும். அமாவாசை, முன்னோர்கள் இறந்த திதி இவைகளில்முன்னோர்களை வேண்டி தானம் செய்ய, நாம் செய்த அளவின் மடங்குகள் பணம் வரும். தைரியமாக தர்மம் செய்பவன் வீட்டிற்குள் மகாலக்ஷ்மி பொன்மழை பொழியச் செய்வாள். வெள்ளிக்கிழமை விளக்கேற்றி கனகதாரா ஸ்தோத்திரம் படியுங்கள். லட்சுமி தேவி நம் வீடு தேடி ஓடி வந்து நிரந்தரமாக தங்கி விடுவாள்.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *