பியூட்டி “புல்” விநாயகர்.. சபாஷ் போட வைத்த மாணவர்கள்.. புதுச்சேரியில் புதுமை!

புதுச்சேரி: நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது.

ஒவ்வொரு வருடமும் விநாயகர் கிரிக்கெட் விளையாடுவது போன்றும், புல்லட் ஓட்டும் விநாயகர், பாகுபலி விநாயகர், ஸ்பைடர் மேன் விநாயகர் உள்ளிட்ட பல்வேறு வடிவங்களில் விநாயகர் சிலையை வடிவமைத்து வித்தியாசமான முறையில் ஒருசிலர் வழிபாடு செய்வது வழக்கம்.

அந்த வகையில் புதுச்சேரி அருகே உள்ள சேலியமேடு வாணிதாசனார் அரசு உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் இயற்கையை பாதுகாக்க வலியுறுத்தி, அருகம் புல்லினால் 7 அடி உயரத்திற்கு பசுமை விநாயகர் சிலையை உருவாக்கி அசத்தி உள்ளனர்.

சுற்றுச்சூழல் சீர்கேடு
ரசாயன கலவை பூசப்பட்ட விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் கரைப்பதினால் சுற்றுச்சூழல் மாசு ஏற்பட்டு, நீர் நிலைகளில் வாழும் உயிரினங்களுக்கும் ஆபத்து ஏற்படுகிறது.

ஆசிரியர் வழிகாட்டுதல்
இரசாயனத்தால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை பயன்படுத்தக்கூடாது என்பதை வலியுறுத்தியும், இயற்கையை பாதுகாக்கும் நோக்கிலும், வாணிதாசனார் அரசு உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் 50 க்கும் மேற்பட்டோர் ஒன்றிணைந்து தங்களது ஓவிய ஆசிரியர் உமாபதி வழிகாட்டுதலின்படி இதை செய்துள்ளனர்.

புல் விநாயகர்
பள்ளி வளாகத்தில் இருந்த அருகம் புல் மற்றும் மூங்கில் குச்சிகளை கொண்டு இரண்டரை மணி நேரத்தில் 7 அடி உயரமுள்ள விநாயகர் சிலையை உருவாக்கி அசத்தி உள்ளனர்.

பசுமை விநாயகர்
மாணவர்களின் கற்பனையில் உருவான பசுமை விநாயகர் வலது கையில் எழுது கோலும், இடது கையில் திரிசூலம் என விநாயகரின் வடிவத்தை தத்ரூபமாக காட்டுகிறது.

இயற்கையை காப்போம்
இயற்கையை பாதுகாக்கும் நோக்கிலும், இயற்கயை பற்றி மக்களிடத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாணவர்கள் உருவாக்கியுள்ள இந்த அருகம் புல் விநாயகர் அனைவருடைய கவனத்தையும் ஈர்த்துள்ளது.

பாராட்டுவோம்
சமீப ஆண்டுகளாக இது போன்று இயற்கையுடன் இணைந்த விழாவாக விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுவது அதிகரித்து வருகிறது. அதேபோல மரம் நடுவதை ஊக்குவிக்கும் வகையில் விதை விநாயர் சிலைகளும் சமீப காலமாக அதிகரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *