உலகின் எந்த கோடியில் இருந்தாலும் நினைத்ததை நிறைவேற்றும் பாபா…!

இறைவனிடம் நாம் அன்பு வைக்கும் போது, எள் முனை அளவு கூட சந்தேகம் இல்லாமல் வைக்க வேண்டும். அப்போது தான் அந்த பக்தி முழுமைப் பெறும். நம்முடைய கோரிக்கைகள் நியாயமாக இருப்பின், அதை தெய்வம் நிச்சயம் நிறைவேற்றும் என்ற நம்பிக்கை நமக்கு வேண்டும்.

பாபாவின் அன்புக்கு பாத்திரமான தாமோதரை எல்லாரும் செல்லமாக தாமு அன்னா என்றே அழைப்பார்கள். பாபாவும் அவ்வாறே அழைத்தார். ஒரு தடவை கோவாவைச் சேர்ந்த ராலே என்ற பணக்காரர் ஒரு பெரிய பார்சலில்300 மாம்பழங்களை சீரடி பாபாவுக்கு அனுப்பி வைத்தார். அதில் 8 நல்ல மாம்பழங்களை பாபா எடுத்து”இந்த 8 மாம்பழங்களையும் நான் தாமு அன்னாவுக்காக எடுத்து வைத்திருக்கிறேன். அவை இங்கேயே இருக்கட்டும்” என்றார்.

மசூதியில் இருந்த மற்ற பக்தர்களுக்கு, பாபா ஏன் 8 மாம்பழங்களை தாமோதருக்காக எடுத்து வைக்கிறார் என்ற உண்மை முதலில் தெரியவில்லை. தாமோதருக்கு மொத்தம் 3 மனைவிகள். அவர்களில் ஒருவருக்குக் குழந்தை இல்லையே என்ற ஏக்கம் தாமோதருக்கு நீண்ட நாட்களாகவே இருந்து வந்தது.ஏராளமான ஜோதிடர்களிடம் அவர் தன் ஜாதகத்தை காட்டியும், ஜோதிடர்கள் அனைவரும் தாமோதரனின் ஜாதகத்தில் முக்கிய இடத்தில் பாவக்கிரகம் ஒன்று இருப்பதால் இந்த பிறவியில் குழந்தை பிறக்க வாய்ப்பே இல்லை என்று கூறிவிட்டனர்.

இதனால் அவர் தனக்கு குழந்தை பாக்கியம் கிடைக்காது என்ற முடிவுக்கு வந்திருந்தாலும், ஒரு நம்பிக்கையுடன் பாபா தனக்கு ஒரு குழந்தையை அருள மாட்டாரா என்ற ஏக்கத்துடன் சீரடிக்கு வந்து கொண்டே இருந்தார். தாமோதரின் உள்ளக் குமுறலை பாபா நன்கு அறிந்திருந்தார். தாமோதரனின் மனக்குறையை போக்க அவர் தக்க நேரத்துக்காக காத்திருந்தார். பாபா… சொன்னது போல சிறிது நேரத்தில் தாமோதர் மசூதிக்குள் ஏறி வந்தார். பாபா கணித்தது போலவே அவர் வந்து விட்டாரே என்று மற்ற எல்லா பக்தர்களும் ஆச்சரியம் அடைந்தனர்.

தாமோதர் பாபாவின் காலடியில் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கினார். அவரை ஆசீர்வதித்த பாபா, ”இந்தா பிடி 8மாம்பழங்கள்” என்று கொடுத்தார். மகிழ்ச்சியோடு அந்த 8 மாம்பழங்களையும் தாமோதர் பெற்றுக் கொண்டார். அப்போது பாபா, தாமோதரனைப் பார்த்து, இந்த 8 மாம்பழங்கள் உனக்கு குழந்தைப் பாக்கியம் தரும் சக்தி கொண்டவை. எனவே இவற்றை கவனமாக எடுத்துச் செல். இந்த 8 மாம்பழங்களையும் நீ சாப்பிடக் கூடாது.

உன் இளைய மனைவிக்கு கொடு. அவள் இந்த மாம்பழங்களை சாப்பிட்டால் உன் விருப்பம் நிறைவேறும்” என்றார்.ஏனோ தெரியவில்லை, அந்த சமயத்தில் பாபா மீது தாமோதருக்கு நம்பிக்கை வரவில்லை. எல்லா ஜோதிடர்களும் தனக்கு குழந்தைப்பேறு இல்லை என்று சொல்லி விட்ட நிலையில் இதை எப்படி உறுதியாக நம்புவது என்று யோசித்தார். அவர் பாபாவை பார்த்து கடவுளால் நிர்ணயிக்கப்பட்ட விதிகளை கடவுளாலேயே மாற்ற முடியாது என்கிறார்கள். இப்போது கடவுள் இயற்கைக்குப் புறம்பான செயலைச் செய்வாரா? என்றார்.

உடனே பாபா ”ஒரு ரோஜாச் செடியில் ஒரு கிளையில் சிவப்பு ரோஜாவும் மற்றொரு கிளையில் வெள்ளை ரோஜாவும் பூக்க முடியுமா?” என்று கேள்வி கேட்டார். அதற்கு என்ன சொல்வது என்று தாமோதரருக்குப் புரியவில்லை. அதை உணர்ந்த பாபா, ”நாளைக்காலையில் நான் உலாப் போகும் போது தோட்டத்துப் பக்கம் வா தாமோதர்” என்றார்.மறுநாள் பாபாவுடன் தோட்டத்திற்குச் சென்றார் தாமோதர்.

தோட்டத்தில் ஒரு ரோஜாச் செடியை தாமோதரருக்கு சாய்பாபா சுட்டிக் காட்டினார். அந்த ரோஜா செடியில் ஒரு சிவப்பு ரோஜாவும், பக்கத்திலேயே ஒரு வெள்ளை ரோஜாவும் பூத்திருந்தது. அதை கண்டதும் தாமோதரரருக்கு ஆச்சரியம் தாங்க முடியவில்லை. அப்படியே சாஷ்டாங்கமாக பாபாவின் கால்களில் அவர் விழுந்தார்.

”தாமோதர் இது என்னால் ஏற்படவில்லை. என் பக்தனின் சந்தேகம் தீர்க்க ஆண்டவனை வேண்டினேன். அதனால் இந்த அற்புதம் விளைந்தது” என்றார். அதன் பின் பாபா கொடுத்த 8 மாம்பழங்களையும் தாமோதர் பெற்றுச் சென்றார். அதில் துரதிர்ஷ்டவசமாக 4 மாம்பழங்கள் காணாமல் போய் விட்டன. அப்படி மாயமான 4 பழம் போக மீதமிருந்த 4 மாம்பழங்களைக் கொண்டு சென்று தாமோதர் தன் மனைவியிடம் கொடுத்து சாப்பிட சொன்னார். தாமோதர் மனைவிக்கு பாபாவின் அருளால் அடுத்தடுத்து எட்டுக் குழந்தைகள் பிறந்தன.

அவர்களில் 4 மாம்பழங்கள் மாயமானது போல 4 குழந்தைகள் இறந்து போய்விட்டனர். மற்ற 4 பேர் சவுபாக்கியங்களுடன் வாழ்ந்தனர். இப்படி தன்னை நம்பி நாடி வந்த அடியவர்கள் வாழ்வில் பாபா நிகழ்த்திய அற்புதங்கள் ஏராளம். உலகின் எந்த கோடியில் இருந்தாலும் அவரை நினைத்து விட்டால் நிச்சயம் அதற்கு பலன் உண்டு.

ஓம் சாய் ராம்.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *