ஆட்டுப் புழுக்கை மட்டும் ரவுண்டு, ரவுண்டாக இருப்பது ஏன்? மூக்கு மூடாம படிச்சு தெரிஞ்சுக்குங்க!

பசு, நாய், பிற விலங்குகள் மலத்திற்கும், ஆட்டின் மலத்திற்கும் நிறைய வேறுபாடு இருக்கிறது. ஆடு மட்டுமல்ல, செம்மறி, முயல், மான் போன்ற சில குறிப்பிட்ட விலங்குகளின் மலம் மட்டும் உருண்டையான வடிவத்தில் இருக்கிறது.

இதில் பெரும்பாலும் நாம் கண்டது ஆட்டுப் புழுக்கை தான். பெயரளவில் கூட ஆட்டின் மலத்திற்கு கூட மாறுபட்ட பெயர் சொல்லி தான் அழைக்கிறோம். தினந்தோறும் நம் வாழ்வில் பல இடங்களில் ஆட்டையும் கண்டிருப்போம், அதன் புழுக்கையும் கண்டிருப்போம். இதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க வாய்ப்பு இல்லை.

ஆனால், என்றாவது அது மட்டும் ஏன் இப்படி சிறு சிறு துகள் உருண்டை வடிவத்தில் இருக்கின்றன, என நீங்கள் என்றாவது யோசித்தது உண்டா? இன்று தான் நாங்களும் யோசித்தோம். இதோ! இணையத்தில் தேடிய போது இந்த கேள்விக்கு கிடைத்த சில சுவாரஸ்யமான பதில்கள்…

டயட்!
பிரிஸ்டல் பல்கலைகழகத்தை சேர்ந்த தேவி வின்க் என்பவர், ஆடு, மாடு, குதிரை, மனிதன் என அனைவரின் மலத்தின் வடிவ வெளிப்பாட்டில் வேறுபாடுகள் இருக்கின்றன. இந்த வேறுபாட்டுக்கு காரணம் அவற்றின் தசை தொகுதி மற்றும் குடல் வடிவம், அல்லது குடல் கழிவை வெளியேற்றும் உறுப்பின் அமைப்பு போன்றவை காரணமாக இருக்கலாம் என்று தெரிவித்திருக்கிறார். மேலும், இதற்கு அந்தந்த விலங்குகள் உண்ணும் உணவுகளும் (டயட்) கூட ஒரு காரணமாக இருக்கலாம் என்று தான் கருதுவதாக டேவிட் வின்க் தெரிவித்திருக்கிறார்.

மலக்குடல்!
ஆடுகளின் மலம் மட்டும் சிறுசிறு துகள் போன்ற உருண்டை வடிவத்தில் வெளிப்பட காரணம் அதன் குடல் இயக்கம் மற்றும் அமைப்பு தான். ஆட்டின் மலமானது பெருங்குடலில் இருந்து வெளிப்படும் போது இந்த வடிவத்தை அடைந்துவிடுகிறது. மேலும், ஆட்டின் மலக்குடலனது புழுக்கைகளை ஒரு ரிதமான முறையில் தள்ளி வெளிப்பட செய்கிறது. இதனால், யூனிஃபார்மாக ஒரே மாதிரி ஆட்டுப் புழுக்கை வெளிப்படுகிறது.

மலக் குடல் வாய்
மாட்டினை போலவே ஆட்டுக்கும் நான்கு வயிறு இருக்கிறது. ஆனால், ஆட்டின் மலக்குடல் வாய் பகுதியானது ஸ்பைரல் வடிவில் இருக்கும். இதனால் தொடர்ச்சியான முறையால் உருண்டையான வடிவத்தில் இதன் மலம் வெளிப்படுகிறது. குதிரைக்கும் இதே போன்றது தான். ஆனால், அதன் மலமானது பெரிய அளவில் வெளிப்படுவதால் புழுக்கை போல காணப்படுவதில்லை. மேலும், இது முயலுக்கும் பொருந்தும் என்று ராஸ் பல்கலைகழகத்தில் கால்நடை மருத்துவம் படித்த ஸ்டெர்லிங் ஹாவெல் என்பவர் பதில் அளித்திருக்கிறார்.

தசை அமைப்பு!
ஆட்டின் பெருங்குடல் இயக்கத்தின் காரணத்தால் தான் அதன் மலம் இப்படி உருண்டையான வடிவத்தில் வெளிப்படுகிறது என்றும், ஒவ்வொரு விலங்கின் குடல் பகுதி தசைகள் தான் அவற்றின் மலத்தின் வடிவத்திற்கு காரணமாக அமைகிறது, அவை தரும் அழுத்தம் காரணமாகவே மலம் வெளிப்படும் ஒரு ஒரு வடிவம் கொள்கிறது. இது செரிமான செயல்பாட்டின் காரணம் என்று ஜப்பானை சேர்ந்த பிரிட்கெட் பர் என்பவர் பதில் அளித்துள்ளார்.

ஆக!
ஒரு விலங்கின், ஒவ்வொரு விலங்கின் மலத்தின் வடிவ வெளிப்பாட்டுக்கு அவை உண்ணும் உணவு, அதில் இடம்பெறும் ஃபைபர், எந்தளவுக்கு உணவில் இருக்கும் சத்தை எடுத்துக் கொண்டு சக்கையை அது வெளியேற்றுகிறது, மேலும், அந்த விலங்கின் பெருங்குடல், மலக்குடல், மலக்குடல் வாய் மற்றும் பெருங்குடல் பகுதியில் அமைந்திருக்கும் தசையின் அமைப்பு என பலவன காரணமாக அமைகின்றன என்பதை அறிந்துக் கொள்ள முடிகிறது.

இந்த பதில்கள் எல்லாம் பல கேள்வி பதில் தளங்களில் இருந்து பெறப்பட்டவையே. எனவே, பிற விலங்குகளுடன் ஒப்பிடுகையில் ஆடு, முயல், செம்மறி, போன்ற விலங்குகளின் மலம் மட்டும் உருண்டையாக இருப்பதற்கு இவையும், இல்லையேல் வேறு ஏதேனும் கூட காரணங்களாக இருக்கலாம்.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *