`கே.ஜி.எஃப்’ ராக்கிபாய் கதை – பேருந்து ஓட்டுனரின் மகன் தற்போது கர்நாடக அஜித்குமார்’….

யஷ் என்கிற நவீன்குமார் : நவீன் குமார் கௌடா இவர் திரைப் பெயரான யஷ் என்ற பெயரில் அறியப்பட்டவர், திரைப்படங்களுக்கு முன்னால் இவர் தொலைக்காட்சி நாடகத்தில் பல்வேறு பாத்திரங்களை நடித்துள்ளார். துணை நடிகர் வேடம்தான், அதையும் மறுக்கவில்லை. எதிர்பார்த்தது வீண்போகவில்லை, படம் ஓரளவு வெற்றியைப் பெறுகிறது.

கே.ஜி.எஃப் : கே.ஜி.எஃப்’ படத்தின் மூலமாகத் தமிழ் ரசிகர்களால் அறியப்பட்டவர் இந்த ராக்கி பாய் (எ) யஷ். கன்னடத் திரையுலகில் இருக்கும் நடிகர்களின் பெயர் அவ்வளவு எளிதில் தமிழக மக்களுக்குத் தெரியாது. அந்த அளவுக்குக் குறுகிய வட்டத்திலேயே கன்னட சினிமா உலகம் பயணித்துக்கொண்டிருக்கிறது. அந்த வட்டத்தை உடைத்து 5 மொழிகளில் ‘கே.ஜி.எஃப்’ வெளியானது. ‘கே.ஜி.எஃப்’ திரைப்படம் முடியும்போது, “அவங்களுக்குத் தெரியாது, ஏற்கெனவே ஒருத்தன் தன்னோட காலடித் தடத்தை பதிச்சுட்டான்னு” என்று ஒரு வசனம் வரும். அது யாருக்குப் பொருந்துகிறதோ இல்லையோ, யஷ்ஷுக்கு நிச்சயம் பொருந்தும். அஜித்குமார் பேசும் “என்னோட ஒவ்வொரு நொடியும் நானா செதுக்குனதுடா” எப்படி அவருக்குப் பொருந்துமோ… அதேபோலத்தான் ‘கே.ஜி.எஃப்’பின் க்ளைமாக்ஸ் வசனம் யஷ்ஷுக்குப் பொருந்தும். யார் இந்த யஷ்? நேற்று சினிமாவுக்கு வந்து இன்று ஸ்டார் ஆனவர் அல்ல. பல வலிகளைத் தாண்டி வந்த ஒரு நடிகன் அவர்…

இவர் உண்மையான பெயர் நவீன் குமார் கௌடா. சினிமாவுக்காக மாற்றிக்கொண்ட பெயர்தான் யஷ். சிறுவயது முதலே பள்ளி மேடை நாடகங்களில் நடித்திருக்கிறார். 10-ம் வகுப்பு படிக்கும்போதே தன்னை நடிப்புக் கல்லூரியில் சேர்த்துவிடச்சொல்லி அடம்பிடித்தார். பள்ளிப்படிப்பை முடி, பார்க்கலாம் என்பது தந்தையின் கட்டளை. வேறு வழியில்லை, 12-ம் வகுப்பு வரை படித்தார். பின்னர், வீட்டில் நடிக்க அனுமதி கேட்டுப் பார்த்தார், கிடைக்கவில்லை. பாக்கெட்டில் 300 ரூபாயுடன் பெங்களூருக்கு ஓடி வந்துவிட்டார். முதல் முதலாக சினிமா உதவி இயக்குநராகப் பயணத்தைத் தொடங்கினார். அந்தப் படம் இரண்டே நாளில் டிராப். அடுத்தகட்டத்துக்குப் போகமுடியாமல் தவித்தவரை, அந்தப் படத்தின் அசோசியேட் டைரக்டர் மோகன் என்பவர் தன்னுடைய வீட்டில் தங்க வைத்தார். அவரது வீடு சிறியதாக இருக்க, இடைஞ்சலாக இருக்க நினைக்காமல் ஊருக்குப் புறப்பட நினைத்தார் யஷ். ஆனால், நாம் வீட்டுக்குச் சென்றால் மரியாதையாக இருக்காது. அதனால், எப்படியாவது ஜெயித்தே ஆக வேண்டும் என்று உறுதியுடன் தங்கினார். நண்பர்கள் மூலம் டிராமா கம்பெனியில் சேர்ந்தார்.

அங்கே திரைக்குப் பின்னால் நடிகர்களுக்கு வசனம் கொடுப்பது, செட் வேலைகள் எனப் பல வேலைகளில் ஈடுபட்டார். அப்போது இவருக்கு ‘எமர்ஜென்சி நடிகர்’ என்ற பெயரும் வைக்கப்பட்டது. டிராமாக்களில் எந்தக் கதாபாத்திரத்துக்கு ஆள் வரவில்லையோ, அந்தக் கதாபாத்திரம் இவருக்குத்தான் கொடுக்கப்பட்டது. அதற்குப் பின்னர்தான் இவருக்கு சீரியல் வாய்ப்பு கிடைத்தது. ஒரே நேரத்தில் கையில் 5 சீரியல்கள். நடிப்பு தாகத்தால் மூன்று வருடங்களில் ஒரே நேரத்தில் அனைத்தையும் நடித்து முடித்தார். ஐந்து சீரியல்களும் ஹிட்.

சீரியலில் முதல் வாய்ப்பு : யஷ்ஷுக்கு முதன்முதலாக சீரியல் வாய்ப்பு கிடைக்கிறது. தட்டிக் கழிக்கவில்லை. ஆனால், ஹீரோ ஆசை விடாமல் அவரைத் துரத்தியது. சீரியலில் இருந்து சினிமாவுக்குக்கு வந்த ஷாருக் கான், சிவகார்த்திகேயன், மாதவன் வரிசையில் இவருக்கு 2007-ம் ஆண்டு சினிமாவில் நடிக்க முதல் வாய்ப்பு கிடைக்கிறது. துணை நடிகர் வேடம்தான், அதையும் மறுக்கவில்லை. எதிர்பார்த்தது வீண்போகவில்லை. படம் ஓரளவு வெற்றியைப் பெறுகிறது. அடுத்த படத்தில் தனித்து தெரிய வேண்டும். நல்ல கதை, நல்ல இயக்குநர், நல்ல தயாரிப்பாளர் கிடைக்க வேண்டும். சாதாரண பேருந்து ஓட்டுநரின் மகனுக்கு இதெல்லாம் அவ்வளவு எளிமையாகக் கிடைத்து விடுமா?! அடுத்த வருடமே அனைத்தும் அவருக்குக் கிடைத்தது. அந்தப் படத்தின் பெயர் ‘மோகின மனசு’ (Moggina Manasu). 2008-ம் ஆண்டு வெளியானது. படம் சூப்பர் டூப்பர் ஹிட். 100 நாள்களைத் தாண்டி ஓடியது. கன்னட நடிகர்களின் கண்கள் யஷ் மீது விழ ஆரம்பித்தன. சீரியல் வாய்ப்புகளுக்கு முன்னர் இவரது சிறு வயது அனுபவமும் கொஞ்சம் சுவாரஸ்யமான வலிகள் நிறைந்த சினிமா கதைபோலத்தான் இருக்கும்.

கன்னட சினிமாவில் பயணம் : முதல் முதலாக நாயகனாக அறிமுகமாகும் சினிமா 100 நாள்களைக் கடந்து ஓடினால், அடுத்தடுத்து வாய்ப்புகள் குவிவது வழக்கம்தான். அப்போது சரியான கதையைத் தேர்வு செய்ய அதிகமாக மெனக்கெடுகிறார். தேர்வு செய்த உடனே ஷூட்டிங்… அந்த வருடமே ‘ராக்கி’ ரிலீஸ். ஆனால், படம் அட்டர் பிளாப். கொஞ்சம் நிறுத்தி நிதானமாகக் கதை கேட்கத் தொடங்கினார். அடுத்த வருடம் ‘கல்லற சந்தே’, ‘கோகுலா’ என இரு படங்கள் வெளியாகி, சுமாராக ஓடியது. 2010-ம் ஆண்டு தேர்வு செய்து நடித்த படம் ‘மோடலசாலா’. படம் ஹிட். வருடத்துக்கு இரண்டு படங்கள் கொடுப்பதாக மீண்டும் முயற்சி செய்கிறார். 2011-ம் ஆண்டு ‘ராஜதானி’, ‘கிராதகா’ என இரண்டு படங்கள் வெளியாகின்றன. ‘ராஜதானி’ சுமாராக ஒட, ‘கிரட்டகா’ பெரிய வெற்றியைப் பெற்றது. இது நம்மூர் ‘களவானி’ படத்தின் ரீ-மேக்….

2012-ல் வெளியான இவரது 3 படங்களில் இரண்டு ஹிட்டும் ஒன்று சுமாராகவும் ஓடியது. தனது அடுத்த படமான ‘ராஜாஹூளி’ (நம்ம சுந்தர பாண்டியன் ரீமேக்) படத்தின் மூலம் தனக்கான ரசிகர்களைக் கட்டமைத்துக்கொண்டார். ‘ராஜாஹூளி’ சூப்பர் டூப்பர் ஹிட். அப்போது ஆரம்பித்த வெற்றிப் பயணம் இன்னும் திரும்பிப் பார்க்கவே இல்லை. அடுத்தடுத்து ஹிட், பிளாக்பஸ்டர், சூப்பர் ஹிட் என வெவ்வேறு ஜானர்களில் வெற்றியைக் கொடுத்துக்கொண்டே இருந்தார். 2016-ம் ஆண்டு, தன் முந்தைய படத்தின் கதாநாயகியான ராதிகா பண்டிட்டைத் திருமணம் செய்துகொண்டார். நடிகர் விஜயகாந்த் போலவே தனது திருமணத்தின்போது ரசிகர்கள் அனைவருக்கும் விருந்து கொடுத்தார்.

இவரது சினிமா பயணத்தில் ‘ராஜாஹூளி’, ‘கஜகேசரி’, ‘டிராமா’, ‘ஹூக்லி’, ‘ராமாச்சாரி’, ‘மாஸ்டர் பீஸ்’, ‘சாண்டு ஸ்ட்ரெயிட் பார்வேர்டு’, ‘கே.ஜி.எஃப்’ ஆகிய படங்கள் முக்கியமானவை. இன்று கன்னட சினிமாவின் ராக்கிங் ஸ்டாராக வலம் வந்து கொண்டிருக்கிறார், இந்த ராக்கி பாய். இவரின் பெயருக்காக திரையரங்கில் எழும் விசில் சத்தம் குறைந்தது 5 நிமிடமாவது திரையரங்கை அதிரவைக்கும். ‘கே.ஜி.எஃப்’ படத்துக்காக ஹெலிகாப்டரில் இவருக்கு மலர் அபிஷேகம் செய்ததே அதற்குச் சான்று. வித்தியாசமான கெட்டப், உடல்மொழி, வசனம், ஆக்‌ஷன், காமெடி, டான்ஸ் என ஆல் ஏரியாவிலும் யஷ் கில்லி. இவர் தனது படத்துக்காக இரண்டு பாடல்களையும் பாடியிருக்கிறார். இவரது மாஸ்டர் பீஸ் திரைப்படத்தில் இடம் பெற்ற ‘அண்ணங்யே’ பாடல்தான் கன்னட சினிமாவில் அதிகமான டான்சர்களை உபயோகித்து எடுக்கப்பட்ட பாடலாக இன்று வரை இருக்கிறது.

ஒரு முக்கியமான விஷயம் இவருக்கு வயது 33. நடிக்க வரும்போது இவரது வயது 21. இதுவரை மொத்தமாக 17 படங்கள் நடித்திருக்கிறார். அதில் 1 படம் அட்டர் பிளாப், 4 படங்கள் சுமார், 6 படங்கள் ஹிட், 4 படங்கள் சூப்பர் ஹிட், 2 பிளாக்பஸ்டர்கள் எனத் தனது சினிமா பயணத்தை நிலை நிறுத்தியிருக்கிறார். இதுவரைக்கும் கன்னட சினிமா வரலாற்றில் உலக அளவில் 200 கோடியை வசூல் செய்த சினிமா, இவர் நடித்த கே.ஜி.எஃப் மட்டும்தான். கன்னட சினிமாவில் குறைந்த ப்ளாப் கொடுத்த நடிகரும் இவர்தான். படம் ஓடினாலும், ஓடாவிட்டாலும் கலெக்‌ஷன் மன்னர்கள் வரிசையில் இவருக்கு முக்கியமான பங்கு உண்டு. ஆம், இன்றைய தேதியில் கன்னட சில்வர் ஸ்கிரீனின் அசைக்க முடியாத வசூல் மன்னன் யஷ்.

மின்னும் நட்சத்திரமாக : கன்னட ஸ்டார்களில் இவருக்கான ரசிகர்கள் கொஞ்சம் அதிகம் என்றே சொல்லலாம். இவர் திரையில் ஆடினால், ரசிகர்கள் நிச்சயமாகத் திரையின் மேடையில் ஆடிக்கொண்டிருப்பார்கள். சாதாரண பஸ் டிரைவரின் மகன் இந்த இடத்தை அடைவது அவ்வளவு எளிதான விஷயமல்ல. சூழ்ச்சி, வஞ்சகம் என அனைத்தையும் கடந்து வந்திருக்கிறார் யஷ்! தெலுங்கு சினிமாவைப் போலவே, கன்னட திரையுலகிலும் குடும்ப ஆதிக்கம் கொஞ்சம் அதிகம். அவர்களுக்கு இடையில் தனக்கான இடத்தைப் பிடிக்க அவர் பட்ட கஷ்டமும் கொஞ்ச நஞ்சமல்ல. எத்தனையோ அவமானங்கள், எத்தனையோ வேதனைகளைக் கடந்து இன்று தனி ஒருவனாக ஜெயித்துக்காட்டியிருக்கிறார் யஷ். 2007-ம் ஆண்டு யஷ் துணைக் கதாபாத்திரத்தில் அறிமுகமாகும்போது, “நான் ஒரு பெரிய ஸ்டார் ஆவேன்” என்றார். மொத்த கன்னட உலகமும் கைதட்டி சிரித்தது. அதைச் சொல்லி 12 ஆண்டுகள் ஆகிவிட்டன. அதே கைகள் தட்டி ரசிக்கின்றன. கோடிகளில் சம்பளம் வாங்கும்போதும், இவரது தந்தை கர்நாடக அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் ஓட்டுநராக பணிபுரிந்துகொண்டிருக்கிறார். யஷ் எவ்வளவு சொல்லியும் தந்தை வேலையை விடாமல் செய்தார்.

கன்னட சினிமா ரசிகர்கள் இவருக்கு வைத்திருக்கும் செல்ல பெயர் ‘தல’. சினிமா இல்லாமல் பொதுவெளியிலும் மக்களுக்கு உதவி செய்வது இவரது வழக்கம். இவரது ‘யஷோ மார்கா’ மூலமாக இன்று பலருக்கும் உதவி செய்துகொண்டிருக்கிறார். கர்நாடகா மாநிலம், கோப்பால் மாவட்டம், யெல்பர்கா தலுகாவில் உள்ள தள்ளூர் கிராமத்தில் 20 கிராமங்களுக்கு வாழ்வாதாரமாக இருந்த ஏரி வற்றிவிட்டது. அதைத் தூர்வாரவும் அகலப்படுத்தவும், இன்னும் சில நீர்நிலைகளைத் தூர்வாரவும் 4 கோடி நிதி உதவி அளித்து, தானே முன்னின்று பணிகளைச் செய்தார். அதன் மூலம் அந்த ஏரி முழுக்க தண்ணீரால் நிரம்பியது. இதனால் கிட்டத்தட்ட 20 கிராம விவசாயிகளும் பொதுமக்களும் பலனடைந்தனர். இதுபோல யஷோ மார்கா அமைப்பு மூலம் பல நீர்நிலைகளையும் தூர்வாரிக் கொடுத்துக்கொண்டிருக்கிறார் யஷ்.

சலாம் ராக்கி பாய் : கடந்த சென்னைப் பெருவெள்ளத்தின்போதும் பெங்களூரிலிருந்து நிவாரணப் பொருள்களை அளித்து உதவி செய்தவர், இதை ஒரு விழாவில் நடிகர் விக்ரம் பெருமையாகப் பகிர்ந்துகொண்டார். தமிழ் சினிமா ரசிகர்களால் அதிகமாகக் கொண்டாடப்பட்ட ‘கே.ஜி.எஃப்’ இரண்டாம் பாகம் தயாராகிக்கொண்டிருக்கிறது. இரண்டாம் பாகத்தில் இந்தி நடிகர் சஞ்சய் தத் இணைந்திருக்கிறார். முதல் பாகத்தைவிட நன்றாக இருக்க வேண்டும் என யஷ் உட்பட மொத்த டீமும் கடுமையாக உழைத்துக்கொண்டிருக்கிறது.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *