சூப்பர்ஸ்டார் படம் முதல் சுமார் ஸ்டார் வரை, தமிழ் சினிமாவை புரட்டி எடுத்த யோகிபாபு…..!

தமிழ்சினிமாவில் இன்று அதிகம் சம்பளம் வாங்கும் காமெடி நடிகர் யார் என்று சொன்னால் கொஞ்சம் நம்புவதற்கு கஷ்டமாக இருக்கும். அந்த யோக நடிகர் வேறு யாருமல்ல, சூப்பர்ஸ்டார் படம் முதல் சுமார் ஸ்டார் படங்கள் ஒன்று விடாமல் நடித்துக்கொண்டிருக்கும் யோகிபாபுவேதான். ஆரம்பத்தில் தொலைக்காட்சியில் அறிமுகமானார், காக்கா முட்டை என அடுத்தடுத்த படங்களில் அசத்தியவர் கோலமாவு கோகிலாவில் நயன்தாராவுடன் இணைந்து நடித்தது சிரிக்கவைத்தார்

உருவக்கேலிக்கு உட்ப்பட்ட யோகிபாபு :
யோகிபாபு குட்டையாக, குண்டாக இருப்பதும், அவரின் பரட்டை தலையையும் பலர் கிண்டல் செய்கிறார்கள். கிண்டல் செய்பவர்கள் கண் முன்பே அசுர வேகத்தில் வளர்ந்து கொண்டிருக்கிறார் அவர். உருவத்தில் என்ன உள்ளது, திறமை இருந்தால் ரசிகர்கள் ஏற்றுக் கொள்வார்கள் என்பதை யோகிபாபு நிரூபித்துவிட்டார். தமிழ்த்திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தில் இயக்குநர் ஷங்கர் தந்திருக்கும் புகாரால்,வைகைப்புயல் புதிய படங்கள் எதிலும் ஒப்பந்தமாகாமல் வீட்டில் புகைந்துகொண்டிருக்க, அடுத்து நல்ல நிலையில் இருந்த பரோட்டா சூரி அரைத்த மாவையே அரைத்துக்கொண்டிருக்க, காமெடியில் தனி ராஜாவாகக் கொடிகட்டிப்பறந்துகொண்டிருக்கிறார் யோகிபாபு.

இதே தொகையை சுமார் ஆறுமாதங்கள் முன்புவரை சம்பளமாக வாங்கிக் கொண்டிருந்த பரோட்டா சூரி, ‘சம்பளத்தை எவ்வளவு வேணும்னாலும் குறைச்சிக்கிறேன்.
நல்ல கேரக்டர் இருந்தா கூப்பிடுங்கபாஸ்’ என்று தெரிந்த இயக்குநர்களுக்கு தூது அனுப்பிக்கொண்டிருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

குறைந்தகாலத்தில் அசுர வளர்ச்சி :
கடந்த மூன்று மாதங்களில் 40 புதிய படங்கள் துவங்கப்பட்டிருக்கிறது என்றால் அதில் சுமார் இருபது படங்களிலாவது இருக்கிறார் யோகிபாபு. தற்போது சுந்தர்.சி. சிம்பு காம்பினேஷனில் லேட்டஸ்டாக கமிட் ஆகியிருக்கும் யோகிபாபுவுக்கு அப்படத்திற்கு பேசப்பட்டிருக்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா? நாள் ஒன்றுக்கு 5 லட்சம் ரூபாய். அப்படத்திற்கு 20 நாட்கள் வரை கால்ஷீட் தந்திருக்கிறார் யோகி. இவன்லாம் காமெடியனாக நடிக்க வந்துட்டான் என்று கிண்டல் செய்தவர்களுக்கு முன்பு ஹீரோவாக நடித்துக்காட்டிவிட்டார் யோகிபாபு. இந்நிலையில் கூர்கா இசை வெளியீட்டு விழாவில் பேசிய நகைச்சுவை நடிகர் மயில்சாமி யோகிபாபுவின் கஷ்டம், பிரச்சனையை பற்றி பேசினார். யோகிபாபு மற்றும் இயக்குநர் பற்றி மயில்சாமி கூறியதாவது: யோகிபாபு எவ்வளவு கஷ்டப்பட்டார் என்பது அவரை தவிர வேறு யாருக்குமே தெரியாது. அவர் எவ்வளவு கஷ்டப்பட்டார் என்று என்னிடம் சொல்லியிருக்கிறார், நானும் பார்த்திருக்கிறேன். ஆனால் இப்பவும் அவர் கஷ்டம் தான் படுகிறார்.

தூக்கம் துறந்த உழைப்பு :
அன்று வேலையில்லாமல் கஷ்டப்பட்டார். தற்போது நிறைய இடங்களுக்கு போய் தூங்க முடியாமல், சாப்பிட முடியாமல், விடிய விடிய நடிக்கிறார். அதுவும் கஷ்டம் தானே. ஒரு நாளைக்கு 4 அல்லது 3 மணிநேரம் மட்டுமே தூங்குவது பயங்கர கஷ்டம். அளவான சாப்பாடும், அளவான தூக்கமும் இருந்தால் உடல்நலம் நன்றாக இருக்கும். கஷ்டப்பட்டாலும் அனைவரிடமும் யோகிபாபு நல்ல பெயர் வாங்கியுள்ளார், அவர் யாரிடமும் கெட்ட பெயர் வாங்கவில்லை. அதுவே அவருக்கு மிகப் பெரிய ஆசிர்வாதம்.

ஹீரோவாக யோகிபாபு :
சமீபத்தில் யோகிபாபு ஹீரோவாக நடிப்பதாக செய்திகள் பரவின. இதனையடுத்து அவரே அதற்கு விளக்கம் தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், ‘எனக்கு இன்னொரு பெயர் இருக்கு’ உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குநர் சாம் ஆண்டன் என்னிடம் ஒரு கதையை சொன்னார். ஒரு நாய் மற்றும் வெளிநாட்டுக் காரரை மையமாக வைத்துதான் இந்தக் கதை. அவர்கள் வழிமாறி வந்து என்னிடம் மாட்டிக் கொள்கின்றனர். நார்மலா எப்போதும் போல காமெடி கேரக்டரில்தான் இப்படத்திலும் நடிக்கிறேன். முக்கிய கதாபாத்திரம் அந்த வெளிநாட்டு பெண்மணி மற்றும் நாய்தான். நான் ஒரு ‘கூர்கா’ கேரக்டரில் நடிக்கிறேன். அவ்வளவுதான். ஹீரோ முகமும் அதற்கான தகுதியும் எனக்கு கிடையாது’ என தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

தர்மபிரபு :
சமீபத்தில் அறிமுக இயக்குனர் முத்துக்குமரன் எழுதி இயக்கியிருந்த தர்மபிரபு படத்தின் வசனங்களை, யோகி பாபுவும் இணைந்து எழுதி நடித்திருந்தார். ஜஸ்டின் பிரபாகரன் படத்திற்கு இசையமைத்திருந்தமையும், எடிட்டிங் பணிகளை மேற்கொண்டது கே,எல். பிரவீன் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *