கலப்பு திருமணம் செய்த தம்பதிக்கு கோமியம் குடிக்கும் தண்டனை: உபியில் பரபரப்பு

கலப்பு திருமணம் செய்த காதல் ஜோடிகளை ஆணவ கொலை செய்வது, ஊரை விட்டு ஒதுக்கி வைப்பது உள்பட பல தண்டனைகள் இந்த நூற்றாண்டிலும் கொடுத்து வருவது இன்னும் தீண்டாமை நாட்டில் ஒழியவில்லை என்பதையே காண்பித்து வருகிறது. இந்த நிலையில் உத்திரப்பிரதேச மாநிலத்தில் கலப்புத் திருமணம் செய்த காதல் ஜோடிக்கு அப்பகுதியின் பஞ்சாயத்து கோமியம் குடிக்கும் தண்டனையை கொடுத்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.உத்தரப்பிரதேச மாநிலத்தில் பூபேஷ் மற்றும் ஆஷா என்ற காதல் ஜோடி சமீபத்தில் திருமணம் செய்துகொண்டனர். இவர்கள் இருவரும் வெவ்வேறு சாதி என்பதால் அந்த பகுதியை சேர்ந்தவர்கள் இந்த திருமணத்தை கடுமையாக எதிர்த்து, இருவரையும் ஊரைவிட்டு தள்ளி வைத்தனர்

இந்த நிலையில் சமீபத்தில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் தங்களை மீண்டும் ஊரில் இணைத்துக்கொள்ள வேண்டும் என பூபேஷ்-ஆஷா தம்பதியினர் கோரிக்கை வைத்தனர். அதற்கு பஞ்சாயத்து தரப்பினர் மீண்டும் ஊரில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்றால் இருவரும் கோமியத்தை குடித்து புனிதமாக வேண்டும் என்றும், அதன் பின்னர் பஞ்சாயத்துக்கு 5 லட்சம் அபராதம் செலுத்த வேண்டும் என கூறினர்

இதனால் அதிர்ச்சி அடைந்த பூபேஷ்-ஆஷா தம்பதியினர் இதுகுறித்து காவல்துறையினர் புகார் அளித்தனர். காவல்துறையினர் உடனடியாக இதுகுறித்து விசாரித்து பஞ்சாயத்து தரப்பினரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இவ்வாறு தண்டனை கொடுப்பது தீண்டாமை குற்றம் என்றும் இனிமேலும் அந்த தம்பதியை ஊரைவிட்டு ஒதுக்கி வைத்தால் கைது நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தனர். இதனையடுத்தே பஞ்சாயத்தார் வேறு வழியின்றி அந்த தம்பதிகளை ஊரில் சேர்த்துக் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *