காற்றில் கரைந்த தேவதை…..முழு அரச மரியாதையுடன் அக்னியில் சங்கமித்த சுஷ்மா சுவாராஜ் புகழுடல்…!

உதவி தேவைப்படும் சாமானிய மக்களுக்கு, ஓடி சென்று உதவும் தேவதையாக விளங்கிய, முன்னாள் மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ் உடல் முழு அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.திடீர், நெஞ்சு வலி காரணமாக நேற்று இரவு அவசரமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முன்னாள் மத்திய அமைச்சர், சுஷ்மா சுவராஜ் சிகிச்சை பலனின்றி இறந்தார். அவருக்கு வயது 67.அதையடுத்து, அவரது உடல், ஜான்பாத் பகுதியிலுள்ள தவான் டீப் பில்டிங்கிலுள்ள அவரது இல்லத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.காலை 8 மணி முதல் 11 மணிவரை பொது மக்கள் அங்கு தங்கள் அஞ்சலியை செலுத்தினர். அப்போது பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட மூத்த தலைவர்களும் அங்கே சென்று சுஷ்மாவுக்கு அஞ்சலி செலுத்தினர். சுஷ்மா இறந்த துக்கத்தால், மோடியின் கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்ததை பார்க்க முடிந்தது.இதன்பிறகு, பாஜக தலைமை அலுவலகத்திற்கு சுஷ்மா உடல் எடுத்துச் செல்லப்பட்டது. அங்கு மதியம் 3 மணிவரை தொண்டர்கள் திரளாக சென்று அஞ்சலி செலுத்தினர். இதையடுத்து, வாகனத்தின் மூலம், அங்கேயிருந்து சுமார் 7 கி.மீ தொலைவிலுள்ள, லோதி ரோடு மின் மயானத்திற்கு சுஷ்மா உடல் எடுத்துச் செல்லப்பட்டது.அப்போது திரளான மக்கள் திரண்டு, சுஷ்மாவிற்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். ஒரு ட்வீட் போட்டால் போதும், தங்கள் குறைகளை தீர்த்து வைக்கும் சூப்பர் பெண் என்று கருதி வந்த சுஷ்மாவை இழந்ததை அவர்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.திரண்டிருந்த மக்களின் கண்களில் இருந்து திரண்டு ஓடிய கண்ணீரே அதற்கு சாட்சி.லோதி ரோடு மின் மயானத்திற்கு சுஷ்மா உடல், எடுத்துச் சென்ற பிறகு, மத அடிப்படையிலான சில இறுதிச் சடங்குகள் செய்யப்பட்டன. பின்னணியில் காயத்ரி மந்திரம் ஒலிக்க, சுஷ்மாவின் கணவர் சுவராஜ் கவுசல், மகள் பன்சுரி சுவராஜ் ஆகியோர் இறுதி சடங்குகளை செய்தனர்.இதன்பிறகு 21 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன், சுஷ்மா சுவராஜ் உடல், அவரது மகள் பன்சுரியால் எரியூட்டப்பட்டது. சுஷ்மாவின் இறுதி அஞ்சலி நிகழ்வில், பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், பாஜக மூத்த தலைவர் அத்வானி, டெல்லி முதல்வர் கேஜ்ரிவால், திரிபுரா முதல்வர் பிப்லாப் தேப், பூட்டான் முன்னாள் பிரதமர், ஷெரிங் டோப்கே உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *