பக்கத்து வீட்டுப் பெண்ணுடன் கணவன் தவறான தொடர்பு: 7 வயது மகளைக் கொன்று மனைவி வெறிச்செயல்

கணவருடன் தவறான தொடர்பில் இருந்த பெண்ணின் மீது கொண்ட கோபம் காரணமாக, அவரது 7 வயது மகளின் கழுத்தை நெரித்துக் கொன்ற மனைவி கைது செய்யப்பட்டார்.பெருந்துறை அடுத்த, கருமாண்டிச்செல்லிபாளையத்தில் வசிப்பவர் சண்முகநாதன் (40). இவரது மனைவி கனகா (34). இவர்களது மகள் தனிஷ்கா (7). இவர் அங்குள்ள பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் வெளியே விளையாடச் சென்ற தனிஷ்காவைக் காணவில்லை என்று பெற்றோர் தேடியபோது வீட்டின் அருகே உள்ள ஒரு மரத்தடியில், உடலில் காயங்களுடன், மர்மமான முறையில் சிறுமி இறந்து கிடந்தார்.இதுகுறித்து பெருந்துறை போலீஸில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் அங்கு வந்த போலீஸார் சிறுமியின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சிறுமியின் மர்மச் சாவு குறித்து பெருந்துறை போலீஸார் விசாரணை நடத்தி வந்தனர். சிறுமி எதற்காக கொலை செய்யப்பட்டார் என்பது மர்மமாகவே இருந்தது.

இந்நிலையில் சிறுமி தனிஷ்காவின் பிரேதப் பரிசோதனையில் அவர் கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது. இது குறித்து போலீஸார் அக்கம்பக்கத்து வீடுகளில், தெருவில் உள்ளவர்களை, சந்தேகப்படும்படி யாரும் புதிய நபர்கள் வந்தார்களா என விசாரித்தனர். அப்போது, அதே பகுதியில் வசிக்கும் வயதான பெண் ஒருவர் கூறிய தகவல் போலீஸாருக்கு முக்கிய துப்பாக அமைந்தது.சிறுமியின் பக்கத்து வீட்டில் வசிக்கும் வனிதா (33) என்ற பெண், கடைசியாக தனிஷ்காவை தோளில் தூக்கிச் சென்றதைப் பார்த்ததாக தெரிவித்தார். இதையடுத்து, வனிதாவைப் பிடித்து போலீஸார் விசாரணை நடத்தினர். இதில், சிறுமி தனிஷ்காவை தான் கொலை செய்ததை வனிதா ஒப்புக் கொண்டார்.சிறுமியை ஏன் கொன்றாய் என்று போலீஸார் கேட்டதற்கு அவர் கூறிய காரணம் திடுக்கிட வைத்தது. குன்னூரைச் சேர்ந்த தான் 9 ஆண்டுகளுக்கு முன் கமலக்கண்ணன்(35) என்பவரை காதலித்துத் திருமணம் செய்துகொண்டதாகவும், தற்போது தங்களுக்கு, எட்டு வயதில் ஒரு மகன் உள்ளதாகவும் தெரிவித்தார்.
பின்னர் அவர் போலீஸில் அளித்த தகவல்:திருமணம் ஆன அடுத்த ஆண்டே தற்போது வசிக்கும் கருமாண்டிச்செல்லிபாளையம் பகுதிக்கு கமலக்கண்ணனும், வனிதாவும் குடிவந்துள்ளனர். பக்கத்து வீட்டில் தனிஷ்காவின் பெற்றோர் சண்முகநாதன்- கனகா தம்பதி வசித்து வந்துள்ளனர். பக்கத்து வீடு என்பதால் இரண்டு குடும்பமும் நட்போடு பழகி வந்துள்ளது.கனகாவின் கணவர் சண்முகநாதன் மதுபோதைக்கு அடிமையானவர். அதனால் குடும்பத்தைச் சரிவர கவனிக்காமல் இருந்ததாகவும் இதற்கு உதவச்சென்ற வனிதாவின் கணவர் கமலக்கண்ணனுக்கும், கனகாவிற்கும் இடையே நட்பு ஏற்பட்டு நாளடைவில் முறையற்ற உறவாக மாறியுள்ளது.
இதுபற்றி தெரிந்த வனிதா தனது கணவரைக் கண்டித்துள்ளார். நாளடைவில் தைரியமடைந்த கமலக்கண்ணன் தனது முறையற்ற உறவை அதிகப்படுத்தியுள்ளார். ஒரு கட்டத்தில் தனது மகனை கண்டுகொள்ளாமல் கனகாவின் மகள் தனிஷ்காவை அதிகமாக கொஞ்சுவதும் அதற்காக செலவு செய்வதுமாக தனிஷ்காவை தனது சொந்த மகள் போல் கமலக்கண்ணன் கவனித்து வந்துள்ளார்.

இதனால், கமலக்கண்ணனுக்கும், வனிதாவிற்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. கணவன் கமலக்கண்ணன் தனது பேச்சைக் கேட்பதில்லை என்றவுடன், வனிதாவின் கோபம் சிறுமி தனிஷ்கா பக்கம் திரும்பி உள்ளது. தனிஷ்கா உயிருடன் இருந்தால் தனக்கும், தன் மகனுக்கும் பிரச்சினை ஏற்படும் என நினைத்த வனிதா, சிறுமியைக் கொலை செய்ய முடிவு செய்துள்ளார்.சம்பவம் நடந்த அன்று, வீட்டின் அருகில் விளையாடிக் கொண்டிருந்த சிறுமி தனிஷ்காவை, தின்பண்டங்கள் தருவதாகக் கூறி வீட்டிற்குச் கூட்டிச் சென்று, வாயைப் பொத்தி, கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளார். பின்னர் யாரும் கவனிக்காத நேரமாகப் பார்த்து , சிறுமியின் உடலைத் தோளில் தூக்கிச் சென்று மரத்தடியில் போட்டுள்ளார்.யாரும் கவனிக்கவில்லை என வனிதா நினைத்திருந்தாலும், மூதாட்டி அதைக் கவனித்துள்ளார். அதுவே வனிதா சிக்க காரணமாக அமைந்தது. பின்னர் போலீஸார் வனிதாவைக் கைது செய்தனர்.கணவனின் தவறான உறவு காரணமாக அப்பாவி குழந்தை கொல்லப்பட்டார். ஒரு குடும்பமே சிதைந்து போனது அப்பகுதி மக்களிடம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *