ஊத்து மலையில் அருளும் பூத நாச்சியம்மன் கோவில்

கோவில் தோற்றம், பூத நாச்சியம்மன் வத்தலகுண்டில் இருந்து மலைப்பாம்பு போல, வளைந்து வளைந்து செல்கிறது அந்த தார் சாலை. கொடைக்கானலை நோக்கிச் செல்லும் அந்தப் பாதையில் கார் அல்லது பஸ்சில் பயணம் செய்யும் போது பக்கவாட்டில் திரும்பிப் பார்த்தால் நமக்கு மரண பயம் ஏற்படுவது சகஜம். அவ்வளவு பயங்கரமான பள்ளத்தாக்குகள்.
அந்தச் சாலையில் சுமார் 30 கிலோமீட்டர் தூரம் பயணம் செய்தால் ஊத்து என்ற மலைக்கிராமம் வரும். சுமார் 60 ஆண்டுகளுக்கு முன் அந்த ஊரின் நடுவே மலையைப் பிளந்து கொண்டு அம்மன் சிலை ஒன்று சுயம்புவாய் வெளிப்பட்டது. ஊர் மக்களுக்கு ஏக மகிழ்ச்சி.

அந்த அம்மனுக்கு ‘பூத நாச்சியம்மன்’ எனப் பெயரிட்டு சிறிய ஆலயம் அமைத்து வழிபடத் தொடங்கினர். சுமார் அரை அடி உயரமே இருந்த அந்த சுயம்பு அம்மன், வளர வளர ஆலயமும் மெருகேறத் தொடங்கியது. தொடர்ந்து கொஞ்சம் கொஞ்சமாக ஆலயத்தை சற்றே விரிவுபடுத்திய மக்கள், அம்மனோடு சில பரிவார தெய்வங்களையும் பிரதிஷ்டை செய்தனர்.

தொடக்கத்தில் அரை அடி உயரமே இருந்த அம்மன், தற்போது இரண்டு அடி உயரத்தில் கருவறையில் அருள்பாலிப்பதைக் காணும் போது நம் மேனி சிலிர்ப்பதை தவிர்க்க இயலாது. சாலையின் ஓரத்திலேயே இந்த ஆலயம் அமைந்திருக்கிறது. முன் கேட்டைத் திறந்து உள்ளே நுழைந்ததும் இடதுபுறம் விநாயகரும், வலது புறம் முருகப் பெருமான் வள்ளி – தெய்வானை சமேதராகவும் தனித்தனி சன்னிதிகளில் அருள்பாலிக்கின்றனர்.

மகா மண்டபத்தை அடுத்து உள்ள கருவறை முகப்பில் இருபுறமும் உள்ள துவாரபாலகிகளின் சிலைகள் நம்மை பிரமிக்க வைக்கின்றன. அத்தனை அழகு. கருவறையில் அன்னை ‘பூத நாச்சியம்மன்’ உளி படாத சுயம்புவாய் மஞ்சளில் குளித்தாற்போல, மங்களகரமான தோற்றத்தில் வீற்றிருந்து அருள்பாலிக்கிறாள். அன்னையின் பின்புறம் ஐந்து தலை நாக சிற்பம் படமெடுத்து அன்னைக்கு குடைபோல் காட்சி தரும் அழகே அழகு. ஆலயம் மேற்கு நோக்கி அமைந்துள்ளதால், அன்னையும் மேற்கு திசை நோக்கி அருள்பாலிக்கிறாள்.

ஆலயத்தின் திருச்சுற்றில் பல ஆண்டுகளைக் கடந்த தல விருட்சமான அரச மரம் காட்சி தருகிறது. வடகிழக்கு மூலையில் நவக்கிரக நாயகர்கள் அருள்பாலிக்கின்றனர்.பொதுவாக மலைப்பாதையில் விபத்துகள் நடப்பது சகஜம். ஆனால் அன்னை சாலையோரம் அமர்ந்து அருளாட்சி செய்வதால், இந்த ஊரில் விபத்துக்களே நடந்ததில்லை என பக்தர்கள் கூறுகின்றனர்.

செவ்வாய், வெள்ளி, மாதப் பிறப்பு, பொங்கல், நவராத்திரி நாட்களில் அன்னைக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெறுகின்றன.தைப்பூசம், பங்குனி உத்திரம், சஷ்டி நாட்களில் முருகப்பெருமானுக்கு விஷேச ஆராதனைகளும் அபிஷேகங்களும் செய்யப்படுகின்றன. சதுர்த்தி நாட்களில் விநாயகப் பெருமானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடக்கிறது.

ஆடி மாதம் 17 மற்றும் 18-ம் நாட்களில் அன்னைக்கு திருவிழா நடத்தப்படுகிறது. அந்த நாட்களில் ஊரே திருவிழாக் கோலம் பூண்டிருக்கும். இந்தப் பகுதியின் அருகே உள்ள மூலை ஆறு, தலை ஆறு ஆகிய நதிகளில் இருந்து அன்னைக்கு கரகம், பால்குடம், முளைப்பாரி சுமந்து சுமார் 100-க்கும் மேற்பட்ட பெண்கள் அன்னையின் சன்னிதிக்கு வந்து தங்கள் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவார்கள். பக்தி பெருக்கோடு அவர்கள் அன்னையின் சன்னிதியில் நுழையும் போது நம் மனமும் சிலிர்ப்பது உண்மை.

இந்த ஆலயம் தினமும் காலை 6 மணி முதல் 10 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையும், பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும்.ஊத்து ஊரின் காவல் தெய்வமாய் மட்டுமின்றி, அந்த மலைப் பாதையை கடக்கும் பயணி களுக்கு துணையாய் நின்று காக்கும் தெய்வமாகவும் இந்த சுயம்பு பூத நாச்சியம்மன் அருள்புரிகிறாள் என்று பக்தர்கள் நம்புவது நிஜமே!

அமைவிடம்

திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டில் இருந்து கொடைக்கானல் செல்லும் மலை சாலையில் 30 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஊத்து என்ற கிராமத்தில் இந்த ஆலயம் அமைந்திருக்கிறது.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *