அண்ணா சமாதி.. ஏன் அத்தனை முக்கியம்?

0

திராவிட முன்னேற்றக் கழகத்தை நிறுவியவரும், திராவிட சித்தாந்தத்தின் மிகப் பெரிய தளகர்த்தர்களில் ஒருவருமான பேரறிஞர் அண்ணா சென்னை மெரீனா கடற்கரையில்தான் மீளாத் துயலில் இருக்கிறார். இவருக்கு எழுப்பப்பட்டுள்ள நினைவிட வளாகம்தான் அண்ணா சமாதியாகும்.

சென்னை என்றால் கடற்கரை உள்ளிட்ட பல்வேறு சின்னங்கள் அடையாளமாக இருந்தாலும் அண்ணா சமாதிதான் அதன் முக்கிய அடையாளமாகும். தமிழக முதல்வராக இருந்த அறிஞர் அண்ணா கடந்த 1969-ஆம் ஆண்டு இயற்கை எய்தினார்.

அவருக்கு சென்னை மெரினா கடற்கரையில் சமாதி அமைக்கப்பட்டுள்ளது. எப்படி தி.கவினருக்கு பெரியார் திடலோ, அது போலத்தான் திமுகவினருக்கு அண்ணா நினைவிடம்.

அண்ணாவின் சாதனை

1969ம் ஆண்டு அண்ணா மறைவடைந்தார். அவரது மறைவு தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அண்ணாவின் இறுதி ஊர்வலத்தில் கிட்டத்தட்ட ஒன்றரை கோடி பேர் கலந்து கொண்டனர். இது கின்னஸ் சாதனையாக பின்னர் மாறியது.

அண்ணா சதுக்கம்

அண்ணா மறைந்த பின்னர் அவரது உடல் மெரீனா கடற்கரையில் கூவம் நதிக்கரையோரம் அடக்கம் செய்யப்பட்டது. அந்த இடத்தில் நினைவிடம் அமைக்கப்பட்டது. பின்னர் அந்தப் பகுதி அண்ணா சதுக்கமாக அறிவிக்கப்பட்டது.

நுழைவு வாயில்

இந்த சமாதியானது கடந்த 1996-1998-ஆம் ஆண்டு திமுக ஆட்சி காலத்தில் கருணாநிதி முதல்வராக இருந்த போது புனரமைக்கப்பட்டது. சுமார் ரூ. 2.75 கோடியில் புனரமைக்கப்பட்டபோது உதயசூரியன் போல் நுழைவு வாயில் வைக்கப்பட்டது.

மார்பிள் கற்களை பதிப்பு

கடந்த 2001-ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த ஜெயலலிதா அந்த உதயசூரியன் நுழைவு வாயிலை அகற்றினார். தந்தம் போன்ற ஒரு வாயிலை அமைத்தார். பின்னர் சமாதிக்கு செல்லும் பாதைகளை விரிவடையச் செய்து மார்பிள் கற்களை சமாதியில் பதித்தார். மேலும் சமாதியின் அருகே மண்டபங்களையும் அமைத்தார்.

ஒன்றரை கோடி புனரமைப்பு

கடந்த 2004-ஆம் ஆண்டு தமிழகத்தில் சுனாமி ஏற்பட்டபோது அண்ணாவின் சமாதியும் அங்கிருந்த கட்டமைப்புகளும் சேதமடைந்தன. இதையடுத்து அதை 1.33 கோடி ரூபாய் செலவில் சரி செய்யப்பட்டது. மீண்டும் கடந்த 2012-ஆம் ஆண்டு சமாதி ஒன்றரை கோடியில் புனரமைக்கப்பட்டது.

யார் சமாதிகள்

கடற்கரையில் அண்ணா சமாதி அருகே அவரை பற்றிய அருங்காட்சியகமும் உள்ளது. இந்த சமாதி தமிழக அரசின் செய்தித் துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இதை பொதுப் பணித்துறை பராமரித்து வருகிறது. இந்த இடத்தில் எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரது சமாதிகளும் உள்ளன.

தமிழக அரசு மறுப்பு

மேற்கண்ட சிறப்புகளை பெற்ற அண்ணா சமாதிக்கு அருகில் தனக்கு 6 அடியில் இடம் வேண்டும் என்று கருணாநிதியே உயிருடன் இருந்த போது கேட்டு கொண்டார். ஆனால் தற்போது ஆட்சியில் இருக்கும் தமிழக அரசு கருணாநிதிக்கு மெரினாவில் இடம் தர மறுக்கிறது.

திராவிட தலைவர்கள்

மெரீனா கடற்கரையில் அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரின் சமாதிகள் உள்ளன. அதாவது திராவிடத் தலைவர்கள் இங்கு அடக்கம் செய்யப்பட்டுள்ளனர். தமிழக அரசு கூறும் காந்தி மண்டபம் பகுதியில் தேசிய கட்சியான காங்கிரஸ் சார்பில் முதல்வர்களாக இருந்த காமராஜர், ராஜாஜி மற்றும் பக்தவத்சலம் ஆகியோரின் நினைவிடங்கள் உள்ளன. திமுக மெரீனா கடற்கரையை வலியுறுத்திக் கேட்பது இந்தக் காரணத்திற்காகத்தான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *